கொரோனா வைரஸ்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு: உலக அளவில் முதலிடத்தில் இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு: உலக அளவில் முதலிடத்தில் இந்தியா!

Sinekadhara

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.

இன்று திங்கட்கிழமை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இன்று ஒரேநாளில் 52,972 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்றுதான் முதன்முதலில் உலகளவில் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பதிவாகியுள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடி உலகளவில் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து 21, 358 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பெரு நான்காவது இடத்திலும், 11,470 பாதிப்புடன் கொலம்பியா ஐந்தாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 8,195 பாதிப்புடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் அடிப்படையில், இன்று அமெரிக்காவில் 47,511 புதிய பாதிப்புகளும், பிரேசிலில் 25,800 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளன. இறப்பு எண்ணிக்கை 38,135 ஆக உள்ளது.

உலகளவில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கணக்கெடுப்பின்படி 18 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6,90,000 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.