கொரோனா வைரஸ்

நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் குழந்தைகளும் பங்குபெற இந்தியா அனுமதி

நிவேதா ஜெகராஜா

அமெரிக்காவை சேர்ந்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான நோவாவாக்ஸ், இந்தியாவில் தங்களின் தடுப்பூசியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிசோதனையில் பெரியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 7-11 வயதுள்ள குழந்தைகளும் பங்குபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதிலும் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், நோவாவாக்ஸ் தடுப்பூசியின் செயல்திறன் கூடுதல் வலிமையுடன் இருக்கும் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் அந்நிறுவனம் சமீபத்தில் முறையிட்டிருந்தது. சர்வதேச தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில்தான் தற்போது இந்தியாவில் நடக்கும் தங்களின் தடுப்பூசி பரிசோதனைகளில், அடுத்தக்கட்டமாக குழந்தைகளையும் பங்குபெற வைக்க அந்நிறுவனம் முயற்சி செய்துவந்தது. அந்தவகையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு இன்று அந்த அனுமதியை அளித்துள்ளது.