கொரோனா வைரஸ்

கைவிட்ட தனியார் மருத்துவமனைகள்: 106 வயது மூதாட்டியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

கைவிட்ட தனியார் மருத்துவமனைகள்: 106 வயது மூதாட்டியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

sharpana

தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்த 106 வயது மூதாட்டியை அரசு மருத்துவமனை கொரோனாவிலிருந்து மீட்டுக் கொண்டு வந்திருப்பது  பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று உறுதியானது. இந்த வைரஸால் உலகம் முழுவதுமே வயதானவர்கள்தான் அதிகம் பாதிப்படைந்துள்ளனர், இறந்துள்ளனர். ஏனென்றால், வயதானவர்கள் பலருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருப்பதால், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு முதியவர்களின் உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. அதனால், எச்சரிக்கையுடன் பலர் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான், மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள டொம்பிவ்லியைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், அவரின் வயதைக் காரணம் காட்டி தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில் டொம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அமைத்த அரசு கொரோனா சிகிச்சை மையத்தில் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்களின் கனிவான கவனிப்பும் சிகிச்சையும் பத்து நாட்களிலேயே மூதாட்டியை குணமாக்கியது. புன்னகையோடு மருத்துவமனை சான்றிதழுடன் மூதாட்டி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட புகைப்படங்கள் நேற்றிலிருந்து ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மகனும் சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்கரே மூதாட்டி குணமானதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில்  அரசு மருத்துவர்களின் சேவையை பாராட்டியுள்ளார்கள்