கொரோனா வைரஸ்

"டெல்டாவை விட 'லாம்ப்டா'வுக்கு வீரியம் அதிகம்" - மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிப்பதன் பின்னணி

"டெல்டாவை விட 'லாம்ப்டா'வுக்கு வீரியம் அதிகம்" - மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிப்பதன் பின்னணி

Sinekadhara

கொரோனா வைரஸில் டெல்டா வகைகளுக்குப் போட்டியாக 'லாம்ப்டா' (Lambda variant) என்ற மற்றொரு திரிபுவகை கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது, மிகவும் வீரியமிக்கதாகவும், பல நாடுகளில் அதிவேகத்தில் பரவி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸின் உருமாற்றம் மற்றும் திரிபுகளையும், அவை பரவும் வேகம் மற்றும் தாக்கங்களையும் கருத்தில்கொண்டு ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

அதில், இந்தியாவில் பரவி பெரும்பாலான உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வகைதான் மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால், அதன் தொடர்ச்சியாக கண்டறியப்பட்ட டெல்டா ப்ளஸ் வகை பெரும்பாலான நாடுகளில் 3-ஆம் அலைக்கு காரணமாக இருக்கும் என்றனர்.

தற்போது, டெல்டா வகைகளுக்குப் போட்டியாக ’லாம்ப்டா’ என்ற மற்றொரு திரிபுவகை கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த வகையானது மிகவும் வீரியமிக்கதாகவும், அதிவேகத்தில் பரவி வருவதாலும் பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலைக்கு இந்த வகை முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும், இது டெல்டா வகைகளுக்கே சவால்விடும் வகையில் அச்சுறுத்தி வருவதாகக் கூறியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பெருவில் முதலில் ஜூன் 14-ஆம் தேதி லாம்ப்டா வகை கண்டறியப்பட்டுள்ளது. மிகக் குறுகிய நாட்களிலேயே கிட்டத்தட்ட 25 நாடுகளில் இந்த வகை பரவி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த திரிபை பொதுவாக C.37 என்று அழைக்கின்றனர். டெல்டா வகையைவிட வேகமாக பரவிவரும் இந்த லாம்ப்டா லத்தீன் அமெரிக்க நாடுகள், பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது.

சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள மிக மோசமான கொரோனா வகை வைரஸுகளில் ஒன்று லாம்ப்டா என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கவனிக்கவேண்டியதா லாம்ப்டா?

அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், மிக வேகமாக பரவுவதாலும் லாம்ப்டா கவனிக்க வேண்டிய ஒன்று என்கின்றனர் உலக சுகாதார நிறுவனமும், பிற ஆராய்ச்சியாளர்களும். அதேசமயம் இது ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வரிசையில் சேரும் அளவிற்கு பரவவில்லை என்கின்றனர். எனினும், இதுவரை உருமாற்றமடைந்ததில் கவனத்தைப் பெற்ற 7 வகைகளில் லாம்ப்டாவும் ஒன்று என்கின்றனர்.

லாம்ப்டா திரிபில் மேலும் உருமாற்றங்கள் ஏற்பட்டு புதிய கிளை திரிபுகளை உருவாக்கினால், அதில் சில மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். லாம்ப்டாவின் ஸ்பைக் புரதங்களிலிருந்து மேலும் 7 வகை திரிபுகள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும், தற்போது வரை அதிக தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் டெல்டாவில் 3 உருமாற்றங்கள்தான் இருந்ததாக கூறுகின்றனர்.

லாம்ப்டா தடுப்பூசிக்கு சவால் விடுமா?

லாம்ப்டா திரிபுகளில் மேலும் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு, அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்தினால், தடுப்பூசிகளால் உண்டான ஆன்டிபாடிகளையும், உடலில் இயற்கையாக உருவாகியிருக்கும் நோயெதிர்ப்பு சக்தியையும்கூட அழித்துவிடும் தன்மை கொண்டதாக இருக்கக்கூடும் என்கின்றனர் வல்லுநர்கள். இவ்வாறு நடந்தால் 2ஆம் அலையில் டெல்டா வகை வைரஸானது தடுப்பூசிகளின்மீது செலுத்திய ஆதிக்கத்தைவிட இது மோசமானதாக இருக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். இருப்பினும், அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதுவரை குறைவாகத்தான் இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலையில் டெல்டா வகையின் பாதிப்புகளிலிருந்து இந்தியா மீண்டுவருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தற்போதுவரை லாம்ப்டா வகை கண்டறியப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.