கொரோனா வைரஸ்

‘உபரியாகும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர வேண்டும்’- சர்வதேச தலைவர்கள் கூட்டறிக்கை

‘உபரியாகும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர வேண்டும்’- சர்வதேச தலைவர்கள் கூட்டறிக்கை

நிவேதா ஜெகராஜா

ஒரே வீட்டில் வசிக்கும் இருவர், இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குள்ளும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, ‘ஒரே வீட்டில் உள்ள தடுப்பூசி செலுத்திய 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தொற்று பரவும் வாய்ப்பு உண்டு’ என்பதை முன்னிறுத்தினாலும்கூட, அதனுடன் ‘தடுப்பூசி செலுத்தாதவர்களிடையே உள்ள பரவலை விட இது குறைவாகவே இருக்கும்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அதிலிருந்து விரைவில் மீளும் வாய்ப்பு அதிகம் என்றும் லான்செட் மருத்துவக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏ.ஓய். 4.2 வகை கொரோனா உருமாற்ற வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியிருப்பது, தடுப்பூசி மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நேரத்தில், சர்வதேச தலைவர்கள் 160 பேரின் தடுப்பூசி தொடர்பான கூட்டறிக்கையை நாம் காணவேண்டியது அவசியப்படுகிறது. அந்த கூட்டறிக்கை, ‘பணக்கார நாடுகள் தங்களிடம் உபரியாக உள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்’ என்பது.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் தலைமையில் முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமானவர்கள் இணைந்து உலக நாடுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன் மற்றும் கனடாவில் சுமார் 24 கோடி கொரோனா தடுப்பூசிகள் உபரியாக இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உடனடியாக இவற்றை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தற்போதே நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேச அளவில் தடுப்பூசி சமநிலையற்ற தன்மை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.