கொரோனா வைரஸ் அச்சுறுத்தலாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாலும் ஐரோப்பிய நாடுகள் ஸ்தம்பித்துள்ளன.
எப்போதும் பரப்பரப்பாகவும், சுற்றுலா பயணிகளுடனும் காணப்படும் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஆகிய நாடுகள் தற்போது மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக எல்லைகளை அடுத்த 30 நாட்களுக்கு மூடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியுடனான போரை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் கொரோனா வைரஸ் தாக்குதலில் 3 ஆம் கட்டத்தில் உள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்ததால் கியூபா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மருத்துவக்குழுக்கள் இத்தாலிக்கு விரைந்துள்ளனர்.
ஸ்பெயினில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆவணங்கள் இன்றி வெளியில் செல்வோருக்கும், போதிய காரணங்கள் இன்றி பயணிப்போருக்கும், அல்லது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கூட்டமாக செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா தொற்று எதிரொலியாக, சுற்றுலா வருவாய் சரிந்ததுடன், பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ லி மெயிரே அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஜெர்மனி அரசு மூன்று வார காலத்துக்கு பொது மக்கள் கூடுமிடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அதனால் தலைநகர் பெர்லினில் மக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். வழக்கமாக நிரம்பி வழியும் நடன அரங்கங்களும், வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலங்களும் ஆள்நடமாட்டம் இல்லாமல் காலியாக கிடக்கின்றன.