பிரிட்டன் போன்று ஒமைக்ரான் தொற்று இந்தியாவிலும் பரவினால் தொற்று எண்ணிக்கை ஒருநாளைக்கு 14 லட்சம் பதிவாகலாம் என்று டாக்டர் வி.கே பால் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் 93,045 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் சிறார் தவிர 100% தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் டெல்டா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருப்பதாக அந்நாடுகளின் அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் பேசுகையில், ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை மோசமாகி வருவதை நாம் கேள்விப்படுகிறோம். அங்கு ஒமைக்ரான் வகை வேகமாக பரவிவருகிறது. அதுபோன்ற சூழ்நிலை இங்கு நிலவாமல் இருக்க நாம் முயற்சி எடுக்கவேண்டியது அவசியமாகிறது. அதேநேரத்தில் அதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்கவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.
பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் வியாழக்கிழமை தொற்று எண்ணிக்கை 80,000ஆக பதிவாகியிருக்கிறது. அதேபோன்று இந்தியாவிலும் பரவினால் இந்திய மக்கள்தொகையின்படி ஒருநாளைக்கு பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சம் என பதிவாகலாம். பிரிட்டனுக்கு இணையாக பிரான்ஸ் நாட்டிலும் 80% அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் ஒருநாளைக்கு பாதிப்பு எண்ணிக்கை 65,000ஆக இருக்கிறது. பிரான்ஸ் போல் இந்தியாவில் பரவினால் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 13 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’’ என்று கூறினார்.
பிரிட்டனில் ஒரேநாளில் 3,021 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை பிரிட்டனில் 14,909 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை அதிகரித்து உள்ளது.