கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்று அழைக்கப்படுகிற மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகுவது சாத்தியமா? என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் சென்பாலன்.
''கொரோனா பற்றிய நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் நிச்சயமாக கத்தார் தேசம் பற்றிய செய்திகளைப் படித்திருப்பர். கொரோனாவின் தன்மைகளைப் புரிந்து கொள்வதில் கத்தார் நாட்டின் தகவல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் கத்தாரில் தான் நோயுற்றவர்களின் சதவீதம் மிக அதிகம்.
அதாவது கத்தாரில் பத்து லட்சம் பேரில் 39,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 4% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு தினமும் 1000, 2000 என்றிருந்த நோயாளிகள் எண்ணிக்கை இப்போது 200, 300 எனக் குறைந்துவிட்டது. ஆயினும் இதற்கு மந்தை எதிர்ப்பு சக்தி காரணமா அல்லது கத்தாரின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமா என்று நம்மால் கணிக்க முடியவில்லை.
அதேநேரம் அமெரிக்காவில் பத்து லட்சம் பேருக்கு 13,388 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் (1.3%) புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இந்தியாவிலோ பத்து லட்சம் பேருக்கு 1075 பேர் தான் (0.1%) பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் கண்டறியப்படாமலும் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் இல்லாமலே சரியாகி இருக்கலாம். அவர்களை நாம் கோவிட் ஆண்டிபாடி சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
மந்தை எதிர்ப்பு சக்தியானது ஒரு சமூகத்தில் உருவாக வேண்டும் என்றால் அந்த நோய்க்கு எதிராக பெரும்பான்மை மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருக்க வேண்டும். கொரோனாவைப் பொருத்தவரை 50-60% பேருக்கு எதிர்ப்பு சக்தி வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் திரு சவுமியா சுவாமிநாதன் கூறுகிறார். வேறு சில ஆராய்ச்சியாளர்கள் குறைந்தபட்சம் 70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வரவேண்டும் என்று கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி மூன்று வழிகளில் வரலாம்.
தடுப்பூசிகள் இல்லாத நிலையில் அடுத்த இரண்டு வழிகள் மூலம் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகக்கூடும்.
உலகிலேயே மிக அதிகமான கத்தார் நாட்டிலேயே 4% பேர் தான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலோ மொத்த மக்கள் தொகையில் 0.1% தான்.
மூன்றாம் காரணமான அறிகுறிகள் இல்லாமால் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் பற்றி பல நாடுகளும் கணக்கெடுத்து வருகின்றன. ஆண்டிபாடி சோதனைகள் மூலம் கணக்கெடுத்துப் பார்த்ததில் ஒரு சில குழுக்களில் அதிகபட்சமாக 20% பேருக்கு கொரொனா நோய்க்கு எதிராக ஆண்டிபாடி இருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஆயினும் பெரும்பான்மை இடங்களில் 5-10% அல்லது அதற்கும் குறைவாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மந்தை எதிர்ப்பு சக்தியை அடையத் தேவையான 60-70% என்பது நிகழ்கால அளவில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இப்போது உள்ள சதவீதங்களை நோக்கினால் மந்தை எதிர்ப்பு சக்தியை அடைய இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் கூட ஆகலாம். அதேபோல ஒருமுறை உருவான நோய் எதிர்ப்பு சக்தி மாதங்கள் செல்லச் செல்ல குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தாக்குதலின் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என்று நினைத்தால் அதிக உயிரிழப்புகளை, உடற்பாதிப்புகளை நாம் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே தடுப்பூசி மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவது தான் இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி.
தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து, அவை பெரும்பான்மை மக்களை சென்றடையும் போது தான் மந்தை எதிர்ப்பு சக்திக்கான வாய்ப்புகள் நம் சமூகத்தில் உருவாகும்'' என்கிறார் அவர்.