கொரோனா வைரஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. அதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது குறைகூறுவது சரியாக இருக்காது என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் கொரோனா வைரஸ் தொடர்பான சில பதிவுகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்" கொரோனா வைரஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. அதற்காக மருத்துவமனை மீதும் சுகாதார அதிகாரிகள் மீது பலரும் குறை கூறுவது மட்டுமே சரியாகாது. அப்படி கூறுவது எளிது. இந்தத் தொற்று பரவுவதற்கு முக்கிய காரணிகளாக மூன்று விஷயங்கள் உள்ளன" எனக் கூறியுள்ளார்.
அதில் முதலாவதாக " கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். பணியிடங்களை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டாவதாக; பொதுச் சுகாதார அமைப்புகளின் உள்கட்டமைப்பு நகரங்களில் வலுவாக இருப்பதைப்போல் கிராமப்புறங்களில் இல்லை. மேலும் நகரங்களில் உள்ள வெவ்வேறான நிர்வாக அமைப்புகள் மாநிலத் தலைமை சுகாதாரத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. ஆகவே அதனை முறைப்படுத்த வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் மூன்றாவதாக " இந்த நோய்த் தொற்றின் சங்கிலித் தொடரை உடனே துண்டித்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து நமக்குத் தேவையான படுக்கை வசதிகள் கிடைக்காமல் தட்டுப்பாடுகள் ஏற்படும். வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை உருவாகும். முகக்கவசங்களை உரியமுறையில் அணிந்து சமூக விலகலைக் கடைப்பிடித்தால் மட்டுமே இந்த நோய் பரவலைக் குறைக்க முடியும்" என பிரதீப் கவுர் தெளிவுபடுத்தியுள்ளார்.