இந்தியாவில் கொரோனா பாதிப்பைச் சரி செய்ய திரையுலகப் பிரபலங்களும், விளையாட்டு வீர்ரகளும், தொழிலதிபர்களும் பிரதமர் மற்றும் மாநில அரசின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரூ.1 லட்சம் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு நிதி வழங்கியதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து பலரும் தோனியால் வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே நிதி கொடுக்க முடியுமா என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சமும், சவுரவ் கங்குலி ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியையும், பதான் சகோதரர்கள் 4000 முகக் கவசங்களையும் அரசுக்கு வழங்கியுள்ளனர். இவர்களைத் தவிர ஓட்டப் பந்தைய வீராங்கனை ஹிமா தாஸ், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கான நிதியை அரசுக்கு வழங்கியுள்ளனர். இவர்களைத் தவிர திரையுலகினர் பலரும் தங்களால் முயன்ற நிதியுதவியைப் பிரதமர் நிவாரண நிதிக்குத் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புனேவில் இருக்கும் முகுல் மாதவ் அறக்கட்டளை சார்பில் கொரோனாவை எதிர்க்க மக்கள் மத்தியில் நிதி திரட்டப்பட்டது. இது "கெட்டோ" என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தோனியின் இந்த உதவியைப் பலரும் பாராட்டினாலும், அவர் அளித்த தொகை குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளமான ட்விட்டரில் சிலர் "ரூ.800 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் தோனி, 100 குடும்பங்களைக் காப்பாற்ற 14 நாள்களுக்கு ரூ.1 லட்சம் நிதியளித்துள்ளார்" என கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானோர் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது.