கொரோனா வைரஸ்

தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; ஆலோசிக்க கூடுகிறது பேரிடர் மேலாண்மை ஆணையம்

நிவேதா ஜெகராஜா

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை மறுநாள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நாளை மறுநாள் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் டெல்லி அரசின் சுகாதாரத்துறை சார்பில் முகக்கவசம் கட்டாய பயன்பாட்டை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்க் பயன்பாடு மட்டுமன்றி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 

தற்போதைக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள நபர்கள் தாங்களே முன் வந்து பரிசோதிக்க வேண்டும் என்றும், தொற்று பரவுவதை தடுக்க மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். “தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, பாசிட்டிவிட்டி விகிதம் மீண்டும் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருப்பதால், அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு செல்லுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று எல்.என்.ஜே.பி. மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். டெல்லியை பொறுத்தமட்டில் மாநிலம் முழுவதும் 1,518 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.