நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சீசனில் கொரோனா தொற்றினால் பதிக்கபட்ட இரண்டாவது டெல்லி வீரரானர் அவர். இதற்கு முன்னதாக அக்சர் பட்டேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி அன்று மும்பை வந்த அவர் கொரோனா கட்டுப்பாடு விதிகளினால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய நார்ட்ஜே 16 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதோடு ஐபிஎல் அரங்கிலேயே அதிவேகமாக பந்து வீசிய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மணிக்கு 156.22 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்தார் அவர். விரைவில் அவர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு நலமுடன் விளையாடுவார் என அந்த அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.