கொரோனா வைரஸ்

கொரோனா உயிர் பலி: உலகம் முழுவதும் 10 ஆயிரத்தை தாண்டியது !

jagadeesh

கொரோனாவுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,041 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியை தொடர்ந்து ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,284 ஆகவும், ஸ்பெயினில் 831 ஆகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு உயிரிழப்பு 207 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 372 பேரும், பிரிட்டனில் 144 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவை விட, அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறி வருகிறது இத்தாலி. சீனாவில் கொரோனாவுக்கு 3,245 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை எந்த அளவுக்கு நம்பகமானது என பல்வேறு கேள்விகளை மருத்துவ உலகம் எழுப்பியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய வைரஸ், இத்தாலியை வெகுவாக பாதிக்க தொடங்கி இருப்பதால், அங்கு பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான அனைத்து வழிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், மதுபான கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வரும் 25-ஆம் தேதி வரை அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், வைரஸ் பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்படாததால், இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளை பொருத்தவரை பிரான்ஸில் வைரஸின் தாக்கம் அதிகரித்திருப்பதால், கடந்த செவ்வாய்கிழமை முதல் லாக்டவுன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள், அதற்கான சரியான காரணத்தை விவரிக்கும் ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினிலும், ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் நான்காவது நாடாக ஸ்பெயின் மாறி வருவதால், அங்கும் லாக் டவுன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.