கொரோனா வைரஸ்

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி

நிவேதா ஜெகராஜா

சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசி, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொடுக்கப்படலாம் என்ற அனுமதியை பெற்றிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள சீரம் நிறுவன சி.இ.ஓ அடார் பூனாவாலா, “கோவோவாக்ஸ் தடுப்பூசியை, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம் என்ற அனுமதியை தேசிய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையத்திடம் பெற்றுள்ளது. இவர்களுக்கும் குறைவான வயதுடையவர்களுக்கான ஒப்புதலையும் விரைந்து பெறுவோம். கொரோனா எதிர்ப்பில் நோவாவாக்ஸ், தற்போது உலக அளவிலான ஆய்வு நிலையில் 90% சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதாக உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 21-ம் தேதி 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசியான `கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியிருந்தது. இந்தியாவில் தற்போது பெரியவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா உள்ளிட்ட சில கொரோனா தடுப்பூசிகளும்; 15 - 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும், கோர்பேவேக்ஸ் தடுப்பூசியும் மட்டுமே செலுத்தப்பட்டு வருகின்றன. இதிலும், 12 - 15 வயதிலான சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டது. தற்போது கோவோவாக்ஸ் தடுப்பூசி அந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் செயல்படும் `பயாலஜிக்கல் - இ’ என்ற மருந்து நிறுவனம், இந்தியாவில் 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை அவசர செயல்பாட்டுக்கு அனுமதிக்க கோரியிருப்பதாக இன்று காலை தகவல் வெளியாகியுள்ளன. அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.