இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 12,249 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் 9,862 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,27,25,055 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 5,24,903 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 81,687 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.60 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது.
கொரோனா பரவல் தினசரி சதவீதம் 3.94 ஆகவும், வாராந்திர சதவீதம் 2.90 ஆகவும் உள்ளது. இதுவரை 196.45 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் மஹாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.