சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிச்சிறப்பு கொரோனா சிறப்பு மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 100 படுக்கைகள் ஆங்கில மருத்துவ முறைக்கும் 100 படுக்கைகள் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ சிகிச்சைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிறப்பு மையத்தின் முக்கிய அம்சங்கள்:
- செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மூலம் இயங்கி வரும் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (SRM Medical College Hospital and Research Center) நாள்தோறும் 150 முதல் 170 பேர் காய்ச்சல் மற்றும் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
- கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் 30 பேர் வரை அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தற்போது கொரானா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர், இணைவேந்தர் டாக்டர் பி.சத்தியநாராயணன் ஏற்பாட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம் பிளாக் பகுதியில் புதியதாக 200 படுக்கை வசதியுடன் தனி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
- தனி மையங்களில் 100 படுக்கை வசதி ஆங்கில வழி மருத்துவ சிகிச்சை அளிக்கவும், 100 படுக்கை வசதி சித்தா, ஆயர்வேதம், ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி சென்னை தி.நகர் அரிமா சங்கத்தின் அறக்கட்டளை மூலமாக கே.கே.நகரில் நடத்தப்பட்டு வரும் ஆயுர்வேதா மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் இந்த சித்தா, ஆயர்வேதம், ஹோமியோபதி சிகிச்சை மையம் இயங்கும்.
- இந்த சிறப்பு மையங்கள் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வசதியுடன் செயல்படும். இங்கு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையுடன் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.