B.1.1.529 வைரஸ் பரவி வரும் சூழலில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
B.1.1. 529 என்ற உருமாறிய தொற்று மீண்டும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வைரசை விட அதிக ஆபத்தானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து சர்வதேச விமான சேவையை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கூபா, மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண், பிரதமர் அலுவலகம் முதன்மைச் செயலாளர் பி கே மிஷ்ரா, நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் பி கே பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கொரோனா பாதிப்பு, புதிய வைரஸ் தொற்றை கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செலுத்தக்கூடிய விகிதம் மற்றும் அதிகரித்தல் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது
நேற்றைய தினம் உலக சுகாதார அமைப்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் B.1.1.529 வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் விமானப் போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. ஓராண்டுக்குப் பிறகு டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு அறிவித்துள்ள சூழலில் இக்கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம் புதிய வைரஸ் தொற்றால் இந்தியாவும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் முதல் உயர்மட்டக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் மாநில அரசுகளின் கோரிக்கைகள் மற்றும் பரிசீலனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.