கொரோனா வைரஸ்

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கும் விரைவில் இந்தியாவில் அனுமதி?

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கும் விரைவில் இந்தியாவில் அனுமதி?

Sinekadhara

மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு மத்திய அரசின் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கும் விரைவில் இந்தியாவில் அனுமதி வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் 3வது அலையை தடுக்கும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தி உள்ள மத்திய அரசு, 32 கோடி பேருக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு மத்திய அரசின் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அவசரகால பயன்பாட்டுக்கானது என்ற அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் வி.கே.பால் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உடன்பாடும் விரைவில் எட்டப்படும் என்று வி.கே.பால் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேசி வருவதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நிறுவன தடுப்பூசிகள் போல் அல்லாமல் ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசியை ஒரே ஒரு தவணை மட்டும் செலுத்தினால் போதுமானது.