தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பரவல் குறைந்ததாலும், தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். எனவே திரையரங்குகளை திறக்க அனுமதி அளிப்பதா? வேண்டாமா என்பது பற்றியும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.