கொரோனா வைரஸ்

‘குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஊழியர்களுக்கு பயிற்சி தரவும்’- மத்திய அரசு அறிவுரை

‘குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஊழியர்களுக்கு பயிற்சி தரவும்’- மத்திய அரசு அறிவுரை

நிவேதா ஜெகராஜா

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு, தடுப்பூசி போடுபவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கென பிரத்யேக தடுப்பூசி மையங்களை அமைக்கலாம் எனவும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு இன்று அறிவுரை வழங்கியுள்ளது.

15 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கியுள்ள அறிவுரையில், “15 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக தடுப்பூசி செலுத்துவோருக்கு உரிய பயிற்சிகளை வழங்குமாறும், கோவேக்சின் தடுப்பூசி மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் என்பதை பணியாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி சேர்த்துக் கொள்வதற்கு தனியாக தடுப்பூசி மையங்களை உருவாக்கி கொள்ளலாம் என்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்படும் சில உடல் நல பாதிப்புகள் குறித்து குழந்தைகளிடம் விளக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில், 15 முதல் 18 வயது வரையிலான சுமார் 7 முதல் 8 கோடி வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.