ஒமைக்ரானை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி பல்வேறு கட்டங்களாக செலுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் திரிபான ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தி, மக்களை காக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பூஸ்டர் தடுப்பூசி வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாக கூறிய ராகுல்காந்தி, பூஸ்டர் தடுப்பூசி மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், தனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.