ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ‘கோர்பேவாக்ஸ்’ என்ற கொரோனா தடுப்பூசியின், 2ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ ) ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உற்பத்தி ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிக்க, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை ஈடுபட்டு வருகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில், கோவிட் சுரக்ஷா திட்டமும் ஒன்று. இத்திட்டத்தின்மூலம் பாதுகாப்பான, திறனுள்ள தடுப்பூசி உருவாக்கத்தை துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
அந்தவகையில், உள்நாட்டு நிறுவனமான ‘பயோலாஜிக்கல் இ’ என்ற இந்திய கொரோனா தடுப்பூசியின் பலகட்ட பரிசோதனையில் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனமான உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) ஆகியவை இணைந்து செயல்படுகிறது. கோவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் இதற்கு நிதியுதவியும் அளிக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் இந்த ‘பயோலாஜிக்கல் இ’ நிறுவனம், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தாங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு டிசிஜிஐ-யிடம் ஒப்புதல் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மேலும் இந்நிறுவனம், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பதின் வயதினருக்கு தயாரித்த ‘கோ்ரபேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியின் 2வது மற்றும் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் கேட்டது. டிசிஜிஐ-யிடமிருந்து அந்த ஒப்புதலை கடந்த 1ஆம் தேதி இந்நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த தடுப்பூசி ஆர்.பி.டி புரத வகையைச் சேர்ந்தது என சொல்லப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: 2021-ல் இந்தியா விநியோகிக்க திட்டமிட்டிருக்கும் தடுப்பூசிகள் பற்றிய அடிப்படை விவரங்கள்
இது குறித்து உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளரும், பிராக் அமைப்பின் தலைவருமான டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறுகையில், ‘‘ குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். இதற்கு டிசிஜிஐ ஒப்புதல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.
பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஹிமா டட்லா கூறுகையில், ‘‘இந்த ஒப்புதல் எங்கள் அமைப்பை முன்னேறிச் செல்லவும், எங்கள் கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கவும் ஊக்குவிக்கிறது’’ என்றார்.