கொரோனா வைரஸ்

ஒரே நேரத்தில் டெல்டா - ஆல்பா இருவகை கொரோனா திரிபாலும் பாதிக்கப்பட்ட அசாம் பெண் மருத்துவர்

ஒரே நேரத்தில் டெல்டா - ஆல்பா இருவகை கொரோனா திரிபாலும் பாதிக்கப்பட்ட அசாம் பெண் மருத்துவர்

நிவேதா ஜெகராஜா

அசாமை சேர்ந்த பெண் மருத்துவரொருக்கு, ஒரே நேரத்தில் டெல்டா மற்றும் ஆல்பா என இருவகை கொரோனா திரிபுகளின் தாக்கம் உடலில் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாமின் திப்ருகர் (Dibrugarh) மாவட்டத்தை சேர்ந்த அப்பெண் மருத்துவரின் பாதிப்பு குறித்து, அம்மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பிஸ்வாஜ்யோடி பத்திரிகையாளருக்கு உறுதி செய்திருக்கிறார். இந்தப் பெண் மருத்துவர் தனது இரு டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் அதனால் அவருக்கு நோயின் தீவிரம் குறைவாக இருக்கிறதென்றும் பிஸ்வாஜ்யோடி தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளில் அவர் பேசுகையில், “இந்தப் பெண் மருத்துவரின் கணவருக்கு ஆல்பா வகை கொரோனா ஏற்பட்டிருந்தது. இவருக்கு ஆல்பா – டெல்டா ஆகிய இருவகை கொரோனா திரிபு உறுதியானது. இவருக்கு மட்டும் இரு வகை திரிபும் உறுதியானது, முதலில் எங்களுக்கு அதிர்ச்சியையே தந்தது. ஆகவே இரண்டாவது முறை அவருக்கு பரிசோதனை செய்தோம். அப்போதும் அதே முடிவுதான் தெரிந்தது. இருமுறை உறுதிசெய்த பின்னரே முடிவை தெரிவித்தோம்.

இரு திரிபுகளின் பாதிப்பு உறுதியானாலும்கூட, அவருக்கு அவற்றின் தாக்கம் மிதமானதாகவே இருக்கிறது. ஆகவே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலைகூட ஏற்படவில்லை. ஏற்கெனவே அவர் இரு டோஸ் தடுப்பூசியும் போட்டிருப்பதால்கூட இப்படி இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

ஒருவகை வைரஸ் தொற்று உடலில் ஏற்பட்டு, அதற்கு எதிரான ஆண்டிபாடி உடலில் உருவாகும் முன்னரே, மற்றொரு வகை வைரஸ் தொற்றும் உடலில் ஏற்பட்டால் இப்படியான ‘ஒரே நேரத்தில் இரு திரிபு’ பாதிப்பு கண்டறியப்படலாம் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இப்படியான பாதிக்கப்பட்டிருக்கும் பெண் அடிப்படையில் மருத்துவர் என்பதால், பணியின்போது அவருக்கு டெல்டா திரிபு பாதிப்பும்; பின் இவரின் கணவர் வழியாக ஆல்பா திரிபு பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

இதற்கு முன், பெல்ஜியமை சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவருக்கு இப்படி ஆல்பா – டெல்டா ஆகிய இரு வகை திரிபும் உறுதியானது. அவர் ஒரு டோஸ்கூட தடுப்பூசி போடாமல் இருந்தார். சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் கடந்த மார்ச் 2021 ல் அவர் உயிரிழந்துவிட்டார்.