ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்த நபர் வெளியே வந்ததால் அவரை கண்மூடித்தனமாகக் காவல் துறை எஸ்.ஐ. ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானோர் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஆந்திராவில் இதுவரை 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்துக்குத் துபாயிலிருந்து ஒருவர் வந்துள்ளார், அவருக்கு 14 நாள்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்திருக்கிறது. ஆனால், அந்த நபர் வீட்டை விட்டு வெளியேறிச் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். அப்பகுதியில் ரோந்து வந்த காவல்துறை எஸ்ஐ ஒருவர் அவரை விசாரித்துள்ளார். அப்போது அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறி வெளியே இருந்தது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஐ கிரண்குமார் அந்த நபரை நோக்கி "நாங்கள் உன்னை வீட்டிலேயே இருக்குமாறுதான் கூறினோம்" எனச் சொல்லிக்கொண்டே லத்தியில் அடிக்க தொடங்கினார். பின்பு, "நீங்கள் உத்தரவை மீறவில்லை என்றால் நாங்கள் ஏன் அடிக்கப்போகிறோம் ? உன்னால் இந்த ஒட்டுமொத்த கிராமமே கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மக்கள் சாக வேண்டுமா" எனத் தெரிவித்து, சரமாரியாக அந்த நபரையும் தந்தையையும் தாக்கியுள்ளார். மேலும், முட்டிப்போடச் சொல்லியும் வற்புறுத்தியுள்ளார்.
காவல்துறை எஸ்ஐ, தாக்கிய வீடியோவை சிலர் ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் மேகதொட்டி சுச்சாரித்தாவுக்கு ட்விட்டரில் டேக் செய்து பகிர்ந்துள்ளனர். அதில் "மதிப்புக்குறிய அமைச்சர் அவர்களுக்கு எதற்கும் ஓர் எல்லை உண்டு, ஒரு மனிதனை இப்படி நடத்துவது சரி அல்ல. அந்த எஸ்ஐ மீது நடவடிக்கை தேவை" எனக் கூறியிருந்தனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் "அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.