கொரோனா வைரஸ்

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் - அஜய் பல்லா

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் - அஜய் பல்லா

Sinekadhara

டெல்லி மற்றும் என்.சி.ஆரின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தியள்ளார். 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் என்.சி.டி.யின் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா வைரஸை சமாளிக்க டெல்லி மற்றும் என்.சி.ஆர். பிராந்தியத்தில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நேரத்தில் ஒன்றிணைவது அவசியம். ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரானா வைரஸை நாம் வெல்லமுடியும். ஒமைக்ரான் வகை கொரோனா மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருப்பதால் கொரோனா பரவல் அதிகரிப்பை சமாளிக்க எந்த ஒரு வழிகளையும் விட்டுவிடக்கூடாது. தேவையான கட்டுப்பாடுகளை உள்ளூர் மட்டத்தில் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். டெல்லி மற்றும் என்.சி.ஆரின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

முக்கியமாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் கருவிகள் முழுமையாக செயல்படுவதையும் அத்தியாவசிய மருந்துகளின் பராமரிப்பையும் உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் கொரோனா பரிசோதனை குறைந்த அளவிலேயே செய்யப்பட்டு வருவதால் அதனை அதிகப்படுத்த வேண்டும்’’ என்றார்.