கொரோனா வைரஸ்

தடுப்பூசி சான்றிதழ், ஆதார் காண்பித்தால் மட்டுமே மது விநியோகம்: நீலகிரி ஆட்சியர் அதிரடி

தடுப்பூசி சான்றிதழ், ஆதார் காண்பித்தால் மட்டுமே மது விநியோகம்: நீலகிரி ஆட்சியர் அதிரடி

நிவேதா ஜெகராஜா
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான மது குடிப்போர், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவி்ல்லை என்ற தகவல் தெரியவந்ததையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்வதை நூறு சதவீதமாக்க வேண்டும் என்ற இலக்கில், அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா ‘இனி வரும் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மது வாங்குபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்’ என்றும், குறைந்த பட்சம் ஒரு டோஸ் மட்டுமாவது செலுத்தியிருந்தால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு ஒன்று ரூ. 1 - 1.5 கோடி வரையில் மதுபானங்கள் விற்பனை  செய்யப்படுகின்றன. இதுவே தடுப்பூசி எடுத்திருப்போர் எண்ணிக்கையை ஆராய்ந்தால் அதில் தற்போது 5,71,029 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், அவர்களில் 1,42,000 நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளது. இன்னும் 3,000 முதல் 4,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால், நீலகிரி மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை நூறு சதவீத இலக்கை எட்டி விடமுடியும் என்ற நிலை உள்ளது.
இவர்களின் பட்டியலை ஆராய்ந்து, தடுப்பூசியை தொடர்ந்து நிராகரித்து வருபவர்கள் யார் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், பெரும்பாலான தடுப்பூசி எடுக்காதோர் மது பிரியர்களாக இருப்பது கண்டறியப்பட்டது. தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் ஒன்றிரண்டு நாட்களுக்கு மது அருந்த முடியாது என்பதால் தடுப்பூசி போடாமல் தவிர்த்து வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.\
இதைத்தொடர்ந்து, இவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று மற்றும் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே  மதுபானம் விநியோகம் செய்யப்படும்’ என்று மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியரின் இந்த நடவடிக்கைமூலம் விரைவில் நீலகிரியில் 100% பேர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற நிலை உருவாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.