கொரோனா வைரஸ்

”98 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வைரஸ்” - உலக சுகாதார அமைப்பு

”98 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வைரஸ்” - உலக சுகாதார அமைப்பு

Sinekadhara

டெல்டா வகை கொரோனா வைரஸ் 98 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு இறங்குமுகமாக இருந்த பல நாடுகளில் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனை இந்தியாவுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கை ரஷ்யாவில் கடந்த ஜனவரி மாதத்திற்குப்பிறகு இன்று அங்கு அதிகபட்ச தினசரி பாதிப்பு பதிவாகி உள்ளது. அங்கு 24 மணிநேரத்தில் 24ஆயிரத்து 439 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஒருமாதத்திற்கு முன்புவரை தொற்று இல்லாத நாடாக இருந்த இஸ்ரேல் கடந்த சில தினங்களாக தினமும் 300 தொற்றுகள் பதிவாகி வருகின்றன. பத்து நாட்களுக்குள் தினசரி பாதிப்பு பத்தாயிரமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலும் தினசரி பாதிப்பு 26 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகிவருகிறது. ஆப்கானிஸ்தானில் ஜூன்மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. தலைநகர் காபூலில், 60% பாதிப்பு டெல்டா வகை கொரோனாவால் ஏற்பட்டது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பங்களாதேஷில் மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து தொற்றுபாதிப்பு அதிகரித்துவருகிறது. மே 25 முதல் ஜூன் 7 வரை தலைநகர் டாக்காவில் பதிவான 68% தொற்றுகள் டெல்டா வகை பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவிலும், கடந்த 3 வாரகாலமாக தொற்று அதிகரித்து வருவதையடுத்து வரும் 20 ஆம்தேதி வரை அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் புதிதாக 5 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நாடுகளில் பதிவாகும் தொற்றுகளில் 60 சதவிகிதத்திற்கும் மேல் டெல்டா வகை தொற்றால் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் தினசரி தொற்று இறங்குமுகமாக இருக்கும் நிலையில், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அடுத்த அலைக்கான சாத்தியங்களும், வாய்ப்புகளும் நெருங்கிக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.