துபாய் வழியே விமானம் மூலம் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா அறிகுறியுள்ள 14 பேரையும் பூந்தமல்லியில் இருக்கும் பொதுச் சுகாதார மையத்தில் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறியுள்ள 14 பேரும் வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்துள்ளதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்யும் போது புதிய விதிமுறைகளை கடைபிடிக்க சுகாதாரத்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த பரிசோதனைகளில் பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சு சளியை அறிவதற்கான ஸ்கேனிங் மற்றும் காய்ச்சல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை 24 மணி நேரத்திற்குள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு பரிசோதனைகளின் முடிவில் முழுவதும் குணமாகவில்லை என்பது தெரியவந்தால் அவர்கள் மீண்டும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.