”அவர் குரல்ல ஒரு ஈரம் இருக்கும்” என்று ஒருமுறை யுவன் சங்கர் ராஜா குறித்து ஏஆர் ரஹ்மான் பேசியிருந்தார். தன்னுடைய இசையால் மட்டுமல்ல, தன்னுடைய ஈரம் நிறைந்த குரலாலும் எல்லோரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் யுவன் சங்கர் ராஜா என்னும் மாயாஜாலம் புரிபவர்.
வலிகளுடன் உழன்றுகொண்டிருக்கும் மக்களை இரவில் நிம்மதியுடன் உறங்கவைக்கும் வேலையை ராஜாவின் பாட்டுக்கள் செய்தது என்றால், வாழ்க்கையில் சரிவை கண்டவர்களின் வலிகளையும், காதலின் வலியில் உழன்றுகொண்டிருக்கும் வாலிபர்களின் வலிகளையும் ஆற்றும் பணியை யுவனின் பாட்டுக்கள் செய்துகொண்டிருக்கின்றன.
காதலிக்கும் இளைஞர்கள் அல்லது காதலை விரும்பும் இளைஞர்கள் அல்லது வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட மாட்டோமா என முயன்றுகொண்டிருக்கும் அனைவரது மொபைல் போனிலும் யுவன் சங்கர் ராஜா பாடல்கள் என்ற ஒரு தொகுப்பு நிச்சயம் இருக்கும். அப்படி இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டவரான யுவன் சங்கர் ராஜா, தொடக்கத்தில் கொடுத்த ஃபிளாப் படங்களால் மிகப்பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டார்.
’அவரிடமா பாட்டு கொடுக்க போறீங்க, அவர்கிட்ட கொடுத்தா படம் ஓடாதே’ என முத்திரை குத்தப்பட்டவர், இன்று ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு சொந்தமானவராக மாறி வளர்ந்து நிற்கிறார்.
இந்நிலையில் ஆரம்பகாலத்தில் எதிர்கொண்ட எதிர்மறையான சம்பவங்கள் குறித்து பேசியிருக்கும் யுவன், “ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன். எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித் தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்.
இதில் உள்ள விஷயம் என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. உங்கள் தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும்.
இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது. எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும்" என்று பேசியுள்ளார்.