வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் சீசன் இது. சமீபத்தில் வெளியான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான ’நடிகையர் திலகம்’ ஹிட்டா னது. இப்போது இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கைக் கதை ’சஞ்சு’ என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து கிரிக்கெட் வீரர் கபில்தேவ், ஜெயலலிதா, ஸ்ரீதேவி, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் உட்பட பலரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக்கப்பட இருக் கிறது.
இதற்கிடையே, ஆந்திர மாநில மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவர் வாழ்க்கை கதையில் மம்மூட்டி நடிக்கிறார். மகி ராகவ் இயக்கும் இந்தப் படத்தின் டீசர், ஒய்.எஸ்.ஆரின் பிறந்த நாளான இன்று வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபற்றி இயக்குனர் மகி ராகவ் கூறும்போது, ‘ஒய்.எஸ்.ஆரின் மொத்த அரசியல் வாழ்க்கையை படம் பேசவில்லை. 2003 ஆம் ஆண்டில் அவர் மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பாதயாத்திரை ஆந்திர அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்பட்டது. அதை பதிவு செய்யும் விதமாக இந்த படம் இருக்கும். இந்தப் படத்தில் நடிக்கும் மம்மூட்டி பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவர் ஒய்.எஸ்.ஆர் கேரக்டரில் சிறப்பாக பொருந்தியிருக்கிறார். தெலுங்கு வசனங்களை மலையாளத்தில் எழுதி வைத்து, புரிந்துகொண்டு பேசுகிறார் மம்மூட்டி. அவரே டப்பிங் பேசியிருக்கிறார். அவர் இப்போது என்னை விட சிறப்பாக தெலுங்கு பேசுகிறார்’ என்றார்.
ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட உள்ளனர்.