சினிமா

'கருத்துரிமைக்கு பாதிப்பு' - இந்திய சினிமாவை அலறவிடும் சட்டத் திருத்த வரைவு சொல்வது என்ன?

'கருத்துரிமைக்கு பாதிப்பு' - இந்திய சினிமாவை அலறவிடும் சட்டத் திருத்த வரைவு சொல்வது என்ன?

EllusamyKarthik

மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதா, இந்திய சினிமா துறையினரிடையே அச்சத்தை தூண்டியிருக்கிறது. Cinematograph Act-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் என்ன சொல்கிறது, எதற்காக சினிமா துறையினர் அஞ்சுகின்றனர் என்று சற்றே விரிவாக பார்ப்போம்.

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை பொதுமக்கள் கருத்திற்காக பத்து நாட்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டது. இந்த புதிய வரைவு, சில மாற்றங்களை முன்மொழியும் வகையில் அமைந்ததிருக்கிறது. குறிப்பாக, இந்தப் புதிய சட்டத்தின், பிரிவு 5பி(1)-ன் படி திரைப்படங்களை சான்றளிக்கும் வழிகாட்டுதலுக்கான கொள்கைகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், மத்திய அரசு அதனை திருத்துவதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே சான்று வழங்கப்பட்ட படங்களின் சான்றுகளை திருத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகள் மூலம் முந்தைய காலங்களில் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்தப் புதிய சட்டம் நீதிமன்றங்களின் தீர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மத்திய அரசின் தலையீட்டிற்கு இடம் அளிக்கிறது. 

இதேபோல், இதுவரை திரைப்படங்கள் மூன்று வகைகளாக சான்றிளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மக்களும் பார்க்கும் வகையிலான 'யு' சான்று, 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் உடன் பார்க்கும் வகையில் 'யு/ஏ' சான்று, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் படங்களுக்கான 'ஏ' சான்று என வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் புதிய வரைவு, வயது அடிப்படையிலான சான்றிதழை கொடுக்கப்போவதாக கூறுகிறது. அதாவது U/A 7+, U/A 13+ மற்றும் U/A 16+ என்ற வகையில் புதிய சான்றுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரையுலகினர் தங்கள் படங்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய இறுதி அமைப்பாக இருந்த திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Film Certificate Appellate Tribunal) சமீபத்தில்தான் கலைக்கப்பட்டது. அதற்குள் இந்த சட்ட வரைவு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியாவின் பிரபல இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், கமல்ஹாசன் போன்ற இந்திய திரைப்படத் துறையை சேர்ந்த மூத்த படைப்பாளிகள் சிலர் மட்டுமே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழு இந்தப் புதிய ஒளிப்பதிவுச் சட்ட வரைவில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக ஆன்லைன் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்தக் குழு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. அதில், ``இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு அதிகளவிலான அதிகாரத்தை அளிப்பதோடு, சட்ட வரைவு நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் சினிமாவில் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்த விஷயத்தில் மவுனம் காத்து வரும் நிலையில், இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் ஆன்லைன் பிரசாரம் என்ற முன்னெடுப்பை கையிலெடுத்துள்ளனர். மத்திய அரசால் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒன்றிணைத்துள்ளனர். 

12 பக்கம் கடிதம் எழுதியுள்ள இந்தக் குழு, இந்த சட்டத் திருத்தத்தை கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், ஏப்ரல் மாதத்தில் ரத்து செய்யப்பட்ட திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர். திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இல்லையென்றால் திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) அளிக்கும் சான்றிதழில் அதிருப்தி ஏற்படும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக நீதிமன்றங்களை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை சுட்டிகாட்டிய இந்தக் குழு, இதனால் திரைப்பட வெளியீடுகளில் தாமதங்கள் ஏற்படுவதோடு, இது நிதி இழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் தங்கள் கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

மேலும், ``மத்திய அமைச்சகத்தின் இந்த திடீர் நடவடிக்கை திரைப்பட துறைக்கு மற்றொரு அடியாகும். மேலும் இந்த சட்ட வரைவு தணிக்கை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், சினிமா துறையின் மீது மத்திய அரசு உட்சபட்ச அதிகாரம் செலுத்த வழிவகுக்கும், கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும், திரைப்படத் தயாரிப்பாளர்களை அரசு உறுப்பினர்கள் முன் சக்தியற்றவர்களாக ஆக்குவதோடு, அச்சுறுத்தல்கள், காழ்ப்புணர்ச்சியை எதிர்கொள்ள வைக்கும்" என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனர். 

இந்தக் கடித்தில் இயக்குநர்கள் திவாகர் பானர்ஜி, ஸோயா அக்தர், விக்ரமாதித்ய மோத்வானே, ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், அபிஷேக் தாஹனே, ஃபாரன் அக்தர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

திருட்டுத்தனமாகவும், கள்ளத்தனமாகவும் திரைப்படங்களை வெளியிடுவதால், திரையுலகிற்கும் அரசாங்கத்திற்கும் பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்றும், இதனை தடுக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தம் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

ஆனால், மத்தியில் இருக்கும் எந்த அரசும் தாங்கள் மக்கள் மீது திணிக்க விரும்புவதை மட்டுமே திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கக் கூடும் என்றும் படைப்பாளிகள் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். நேர்மையற்ற இந்தத் திருத்தங்களுக்கு எதிராக தேச அளவில் திரைத்துறையினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

தகவல் உறுதுணை: The Telegraph