‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து நடாவ் லாபிட் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுபோன்ற கருத்துக்களை, நான் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், இந்திய சர்வதேச திரைப்பட விழா வின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து படக்குழுவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்படத்தில் நடித்த அனுபம் கெர், நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக் கேடானது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த போட்டியின் தேர்வு குழு தலைவர் நடாவ் லாபிட்டை விமர்சனம் செய்துள்ளார். அதில், “நடாவ் லாபிட்டுக்கு ஒரு திறந்த மடல். இதை என் இந்திய சகோதர சகோதரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், நான் ஹீப்ருவில் எழுதவில்லை. இந்தக் கடிதம் சற்று நீளம் என்பதால் அதன் சாராம்சத்தை முதலில் கூறிவிடுகிறேன். நீங்கள் வெட்கப்பட வேண்டும். அது ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ:
இந்திய கலாசாரம், "விருந்தாளி" என்பவர் கடவுள் போன்றவர் எனக் கூறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி விட்டீர்கள்.
இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பை கொண்டாடவே ஒரு இஸ்ரேலியராக உங்களையும் தூதராக அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் நடத்தையை நியாயப்படுத்த வேண்டுமென்ற உங்கள் தேவையை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு நானும், அமைச்சரும் மேடையில், 'நாங்கள் ஒரே மாதிரியான எதிரியோடு சண்டையிட்டு மோசமான சுற்றுப்புறத்தில் வசிப்பதால், நம் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறது எனப் பேசிக்கொண்டோம்’.
இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, நெருக்கம் குறித்து நாங்கள் பேசினோம். இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப தேசம் என்பதைப் பற்றியும், அமைச்சர் இஸ்ரேலுக்கு வருகை தருவது குறித்தும் இதைத் திரைப்படத் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார். நாங்கள் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் என்பதைப் பற்றிப் பேசினேன். மேலும், மிகப்பெரிய திரைப்பட கலாச்சாரம் கொண்ட இந்தியா இஸ்ரேலிய திரைப்படங்களையும் பார்க்கும்போது நாம் மிகவும் பணிவோடு இருக்க வேண்டும் என்றும் கூறினேன். நான் ஒன்றும் திரைப்பட வல்லுநர் இல்லை. ஆனால், வரலாற்று நிகழ்வுகளை ஆழமாகப் படிப்பதற்கு முன்பு அவற்றைப் பற்றிப் பேசுவது உணர்ச்சியற்ற, ஆணவமான நடத்தை என்பதை நான் அறிவேன்.
மேலும் அவை இந்தியாவில் வெளிப்படையான வடுவாக உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள், அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பேசியதற்கு இந்தியாவிலிருந்து வரும் எதிர்வினைகள், யூத இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள் போன்றவற்றின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதற்கு, யூத இனப்படுகொலையில் இருந்து தப்பியவரின் மகனாக, நான் மனதளவில் மிகவும் காயமடைந்துள்ளேன்.
இதுபோன்ற கருத்துக்களை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது நிச்சயமாக காஷ்மீர் பிரச்சினையின் மீதான உணர்வைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, 'முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து' என்று IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய திரைப்பட விழாவின் நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், IFFI 2022 ஜூரி தலைவர் நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி நிறைவு விழா மேடையில் அவர் பேசியது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து.
அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இத்திரைப்படத்தை விமர்சித்து, பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என நடுவர்கள் குழுவினரால் சுட்டி காட்டப்படவில்லை. ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்ப, அழகியல் தரம் மற்றும் சமூக-கலாச்சார பொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடுவர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டுள்ளோம்.
எந்தவொரு திரைப்படத்திலும் நாங்கள் எந்தவிதமான அரசியல் கருத்துக்களிலும் ஈடுபட மாட்டோம், அப்படி செய்யப்பட்டால், அது முற்றிலும் தனிப்பட்ட கருத்து. அதற்கும் தேர்வு குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.