ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ‘மண்டேலா’ படம் இடம்பெற்றிருப்பதால் நடிகர் யோகி பாபு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு - ஷீலா ராஜ்குமார் நடித்த ‘மண்டேலா’ கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தது. நகைச்சுவை நடிகர்-ஹீரோ என பயணித்துவரும் யோகி பாபுவுக்கு காலத்திற்கும் பெருமைப்படக்கூடிய படமாக அமைந்தது ‘மண்டேலா’. சமூக செயற்பாட்டாளர்கள் கிரிக்கெட் வீரர்கள் பல தரப்பினரும் பார்த்து பாராட்டினார்கள்.
இந்நிலையில், ‘ மண்டேலா’ ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பவுள்ள படத்திற்காக தற்போது இந்தியாவிலிருந்து 14 படங்கள் தேர்வாகியுள்ளன.
அதில், தமிழில் இருந்து தேர்வான ஒரு படம் ‘மண்டேலா’ என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘நாயட்டு’ படமும், வித்யா பாலனின் ஷெர்னி படமும் பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. இந்தப் 14 படங்களைப் பார்த்துவிட்டு ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்புவார்கள். இதற்கான, திரையிடல் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், நெகிழ்ச்சியுடன் ‘மண்டேலா’ படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் 'நன்றி மண்டேலா டீம்’ என தெரிவித்திருக்கிறார் யோகி பாபு.
விஜய் டிவியில் நேரடியாக வெளியானபிறகு ‘தர்மபிரபு’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.