சினிமா

வடிவேலு நீக்கம்: ‘பேய் மாமா’ ஆனார் யோகி பாபு

வடிவேலு நீக்கம்: ‘பேய் மாமா’ ஆனார் யோகி பாபு

webteam

வடிவேலு நடிப்பதாக இருந்த ’பேய் மாமா’ படத்தில் இப்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

நடிகர் வடிவேலு, கடந்த 2015-ஆம் ஆண்டு ’எலி’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், ’இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைக்கா புரொடக்‌ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இது தொடர்பாக, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து அவருக்கு ரெட் போடப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரை படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'பேய் மாமா' என்ற படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஷக்தி சிதம்பரம் இயக்கிய ’இங்லீஷ்காரன்’, ’கோவை பிரதர்ஸ்’ படங்களின் காமெடி காட்சிகளில் ஏற்கெனவே வடிவேலு நடித்திருந்தார். 

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க பிரச்னை காரணமாக, வடிவேலு நடிக்க முடியாமல் இருப்பதால், அவரை நீக்கிவிட்டு யோகி பாபு நடிப்பில் ’பேய் மாமா’ படத்தை உருவாக்கி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு குமுளி பகுதியில் நடந்து வருகிறது.

இதில் இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, வையாபுரி, ரேஷ்மா உட்பட பலர் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போதுதான் காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.