சினிமா

தன் வேலை பறிபோன போதும் மனிதாபிமானத்தின் பக்கமே நின்றாள் ‘சாண்ட்ரா’

தன் வேலை பறிபோன போதும் மனிதாபிமானத்தின் பக்கமே நின்றாள் ‘சாண்ட்ரா’

subramani

தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க பலரும் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வெகுகாலம் பிடிக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். காதல், யுத்தம், நகைச்சுவை, வரலாறு என சர்வதேச அளவில் பல ஜானர்களில் சினிமாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனிமனித வாழ்வில் நிகழும் பொருளாதார பாதிப்புகள் குறித்து துல்லியமாக பேசிய சினிமாக்கள் ரொம்பவே குறைவு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மனித உழைப்பை உறிஞ்சிவிட்டு எப்படி மனிதநேயமின்றி பணியாளர்களை தூக்கி எறிகின்றன என்றும் முதலாளிகளுக்கு பணம் மட்டுமே நோக்கம் என்பது பற்றியும் எளிய நடையில் சிறிய பொருட்செலவில் பேசுகிறது இந்த பெல்லிஜியம் நாட்டுத் திரைப்படம். அதே நேரம் சூழல் உருவாக்கும் மோசமான பொதுத் தன்மையினால் நிறுவனங்களும் கையறு நிலையில் தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் சமரசமின்று பதிவு செய்கிறது 2014'ல் வெளியான Two Days One Night என்ற பெல்ஜியம் நாட்டு சினிமா.

சாண்ட்ரா பெல்ஜியத்திலுள்ள சூரியமின் உற்பத்தி செய்யும் தனியார்  நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அங்கு சாண்ட்ரா’வையும் சேர்த்து மொத்தம் 17 ஊழியர்கள்.

அவள் உடல் நலக்குறைவு காரணமாக சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கிறது. சாண்ட்ரா வேலைக்கு வராத அந்த நாட்களில் கம்பெனி நிர்வாகம் ஒரு விசயத்தை கவனிக்கிறது. அதாவது சாண்ட்ரா இல்லாததால் இங்கு உற்பத்தி பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. மாறாக மற்ற ஊழியர்கள் கூடுதலாக கொஞ்ச நேரம் செலவிட வேண்டியிருக்கிறது அவ்வளவு தான். எனவே சாண்ட்ராவை ஏன் மீண்டும் வேலைக்கு சேர்க்க வேண்டும்…? என யோசித்து ஒரு முடிவெடுக்கிறது அந்நிறுவனம்.

சாண்ட்ரா’வை வேலையில் இருந்து நீக்குவது சரி என வாக்களிக்கும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக 1000 யூரோக்கள் தரலாம் என்றும் இதனால் சாண்ட்ராவுக்கு மாதா மாதம் கொடுக்கும் ஊதியம் மிச்சமாகும் எனவும் முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் விடுப்பு முடிந்து ஒரு வெள்ளிக் கிழமை அலுவகம் திரும்பும் சாண்ட்ராவுக்கு அவளின் வேலை இழப்பு பேரதிர்ச்சியை கொடுக்கிறது. உடன் வேலை செய்யும் தோழியொருத்தி நிறுவனத் தலைவரிடம் பேசி, சாண்ட்ராவுக்கு மற்றொரு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறாள். அதாவது திங்கட்கிழமை காலை ஊழியர்களிடம் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும். அதில் பாதிக்கும் அதிகமான ஊழியர்கள் தங்கள் போனஸ் தொகையை விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் சாண்ட்ரா மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவாள். இது தான் சாண்ட்ரா முன் இருக்கும் கடைசி வாய்ப்பு, ஒரே வாய்ப்பும் கூட.

இப்போது சாண்ட்ராவிடம் இரண்டு பகல் ஒரு இரவு இருக்கிறது. திங்கட்கிழமை அலுவலகத்தில் வாக்கெடுப்பு நடைபெறும். அது சாண்ட்ராவுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம். சாண்ட்ராவின் கணவர் ஒரு சிறிய ஓட்டலில் சர்வராக வேலை செய்பவர். சிக்கலான பொருளாதார குடும்ப சூழலை எதிர் கொண்டிருக்கும் சாண்ட்ராவுக்கு மாத ஊதியம் என்பது ஜீவநாடி. தன் இரண்டு குழந்தைகளின் கல்வி உட்பட பெறும் பொறுப்புகள் அவளிடம் உண்டு. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு இவ்விரு தினங்களும் சாண்ட்ரா தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று தனக்கு ஆதரவு திரட்டுகிறாள். அவளுக்கு அவர்களிடமிருந்து வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கிறது. சாண்ட்ரா பணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா.? இல்லையா….? என்பது தான் மீதிக் கதை.

அவளது நெருங்கிய நண்பர்களும் சக ஊழியர்களுமான ராபர்ட் , ஜூலியெட் , கடார் ஆகிய மூவரும் சாண்ட்ராவுக்கு ஏற்கனவே வாக்களிப்பதாக உறுதி சொல்லியாயிற்று. இந்நிலையில் சனிக்கிழமை காலை விவ்லியை சந்தித்து நிலையை விளக்கும் சாண்ட்ராவுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. அவள் சந்திக்கும் முதல் இருவர் தங்கள் போனஸ் தொகை தங்களுக்கு மிகவும் முக்கியம். அதே நேரத்தில் நீ வேலைச் சிக்கலில் இருப்பதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.

மூன்றாவதாக சந்திக்கும் நாடின், சாண்ட்ராவை சந்திக்காமலேயே தவிர்த்து விடுகிறாள். “எனக்கு பிச்சை எடுப்பதுபோல உள்ளது. தன்மானம் இழந்தவள் போல் இப்படி ஒவ்வொருவரிடமும் போய் நிற்கும் சூழ்நிலை எனக்கு அவமானமாக உள்ளது” என தன் கணவனிடம் சொல்லி அழுகிறாள் சாண்ட்ரா. கணவன் அவளுக்கு தைரியம் சொல்லி அரவணைக்கிறான்.

அதே நேரத்தில் டிமூ உள்ளிட்ட சிலர் சாண்ட்ராவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதி சொல்ல சாண்ட்ரா சிறிது உற்சாகம் பெறுகிறாள். முதல் நாளான சனிக்கிழமை இரவுக்குள் ஆறுபேரிடம் அவள் ஆதரவு பெறுகிறாள். ஆனால் ‘சூன் மெர்சி’ எனும் நிர்வாக அதிகாரி ஒருவன் சாண்ட்ரா வேலை இழப்பதையே விரும்புகிறான் என்பது அவளது நண்பர்கள் மூலம் தெரிய வருகிறது.

சாண்ட்ராவின் வேலை பாதுகாப்பை பலரும் விரும்பினாலும் அவரவர்களின் குடும்ப சூழல் ஆயிரம் யூரோ போனஸ் தொகையை எதிர் நோக்கி காத்திருக்கும் சூழலில் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் சனி, ஞாயிறு விடுப்பு நாட்களிலும் கூட வேறு சில வேலைகள் செய்வதாக காட்சி படுத்தியிருப்பதிலிருந்து அவ்வூரின் பொருளாதார நிலை நமக்கு புரியவருகிறது. மனிதர்கள் என்ன தான் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க நினைத்தாலும் இவ்வுலகம் அவர்களை கட்டாய பொருளாதார பந்தயத்தில் ஓடச்சொல்லி நிர்பந்திப்பதை அழுத்தமாக பேசுகிறது. இச்சித்திரம்.

சாண்ட்ரா பாதி நம்பிக்கையோடு திங்கட்கிழமை அலுவலகம் அடைகிறாள். வாக்கெடுப்பு நடக்கிறது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து மேட்ச் ட்ரா ஆவது போல, சாண்ட்ராவுக்கு ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் கிடைக்கின்றன.

சாண்ட்ராவை அலுவலக மேலாளர் தன் அறைக்கு அழைக்கிறார். “சாண்ட்ரா உங்களுக்கு சம வாக்குகள் கிடைத்திருக்கின்றன மகிழ்ச்சி. உங்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம் என்றும், மற்ற ஊழியர்களுக்கு சொன்னதுபோல போனஸ் வழங்குவது என்றும் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.” என்று சொல்லும்போது சாண்ட்ராவின் முகம் மலர்கிறது. தொடர்ந்து பேசும் அதிகாரி “ஆனால் நீங்கள் தற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.” சில நிமிட அமைதிக்கு பிறகு தொடரும் அதிகாரி “தற்சமயம் இருப்பவர்களில் ஒருவர் ஒப்பந்த ஊழியர் அவரது ஒப்பந்தம் செப்டம்பரில் நிறைவு பெறுகிறது. நீங்கள் இல்லாத பட்சத்தில் அவரை நிரந்தர ஊழியராக்கலாம் என நினைத்தோம், ஆனால் அவரின் ஒப்பந்தத்தை செப்டம்பருடன் முடித்துவிட்டு உங்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறோம்” என்றதும் தாமதிக்காமல் “அவர் எனக்கு வாக்களித்தவர். தவிர இன்னொருவரின் வேலை பறிக்கப்பட்டு அது எனக்கு வழங்கப்படுவதில் உடன்பாடில்லை” என சொல்லிவிட்டு புதிய நம்பிக்கையுடன் அங்கிருந்து வெளியேறுகிறாள். அவள் தான் சாண்ட்ரா.

உழைக்கும் மக்களின் பிரச்னை வளர்ந்த நாடுகளிலும் கூட உள்ளது. நமது குரல் அவர்களுக்காகவும் ஒலிக்கட்டும் என நமக்கு உலகின் மற்றொரு பக்கத்தை அடையாளம் காட்டுகிறார்கள் இரட்டை இயக்குனர்கள் Luc Dardenne மற்றும் Jean-Pierre Dardenne. அதே நேரத்தில் முதலாளிகளை மட்டும் பொது குற்றவாளியாக்காமல் ‘நண்பர்களுடன் வேலை செய்வதற்கும். வேலை செய்யுமிடத்தில் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்குமான’ மலை மடு வித்யாசத்தையும் போகிறபோக்கில் சொல்லிவிடுகிறார்கள் அவர்கள்.

பாரீஸில் பிறந்த கதையின் நாயகி Marion Cotillard ஒரு பாடகியும் கூட. சிறுவயது முதலே கலை தொடர்பான குடும்ப சூழலில் வளர்ந்த இவர் ஒரு சிறந்த நாடக நடிகையும் கூட. சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்த பிறகு சீசர், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகள் பல பெற்றுள்ளார். Two days one night பொருத்தவரை ஆஸ்கர் ஏமாற்றத்தை தந்தாலும் ஆஸ்திரேலியன் ஃபிலிம் க்ரிடிக்ஸ் விருது, பாஸ்டன் விருது, சின் ஐரோப்பிய விருது என பல்வேறு சர்வதேச விருதுகளை இப்படம் வென்றது.

பிரம்மாண்டம் என்பது ஒரு படைப்பாளியின் படைப்பில், சிந்தனையில், நிஜத்தை நெருங்கிப் பேசும் தரத்தில் இருப்பது தானே தவிர படத்தின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் அல்ல., என்பதற்கு two days one night இன்னொரு சாட்சி.