‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, உதவி இயக்குநர் கே.பி செல்வா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அப்படத்திற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது ‘பிகில்’ திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர இயக்குநர் செல்வா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
கே.பி.செல்வா வழக்கு தொடர்ந்து அது விசாரணைக்கு ஏற்கப்பட்டால் ‘பிகில்’ படத்திற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம் ‘பிகில்’ வெளியீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் பேசியபோது, “நாளை காலையே கே.பி.செல்வா தரப்பு காப்புரிமை வழக்கு தொடரலாம், அப்படி வழக்கு தொடர்ந்தாலும் அதனை உடனடியாக விசாரிப்பதா இல்லையா என்பதை உயர்நீதிமன்றமே முடிவு செய்யும்.
அப்படி அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக்கொண்டால் நாளை மதியம் நீதிபதி முன் விசாரணைக்கு வரும். இதனையடுத்து இயக்குநர் அட்லீ தரப்பும் பதில் மனு தாக்கல் செய்யும். ஆனால் படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்துக்கு தடை விதிக்கலாமா வேண்டாமா என்பதை நீதிபதியே முடிவு செய்வார்” என கூறினார்.
கே.பி.செல்வா தரப்பில் உடனடியாக காப்புரிமை வழக்கை தொடருவதற்கான எந்த முடிவும் எடுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.