சினிமா

விஜய் டூ மகேஷ் பாபு.. ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து விலகிய பிரபலங்கள்! -ஓர் தொகுப்பு

விஜய் டூ மகேஷ் பாபு.. ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து விலகிய பிரபலங்கள்! -ஓர் தொகுப்பு

சங்கீதா

மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரை விருந்தாக அமைய காத்துள்ளது. பல கட்ட சோதனைகளையும், முயற்சிகளையும் தாண்டி வெற்றிக்கரமாக இந்தப் படத்தின் முதல் பாகத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முதலில் விஜய், மகேஷ் பாபு, அனுஷ்கா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா, விஜய் சேதுபதி, அமலா பால் போன்ற பிரபலங்கள் நடிக்க இருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் பிரபலங்கள் எல்லாம் விலகிக் கொள்ள நேர்ந்தது. இதனால் இந்தப் படம் வருமா வராதா என்று எதிர்பார்க்கப்பட்ட, எத்தனை தடைகளையும் முறியடித்து இந்தப் படம் இன்று திரையீட்டிற்கு காத்து நிற்கிறது என்றுப் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் புராண காலத்துப் படங்களும், வரலாற்றுக் கதைகளும், மாயஜால வித்தைப் படங்களும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய சாதனைப் படங்களும் வருவது புதிதல்ல. அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாதபொழுதே, நமது இயக்குநர்களும், திரைப்பிரபலங்களும் சாதித்துக் காட்டியுள்ளனர். ‘சந்திரலேகா’, ‘கர்ணன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என சொல்லிக்கொண்டே போகலாம். பின்னர் சமூக பிரச்சனைகளை தழுவி படங்கள் எடுக்கப்பட்டு அந்தப் படங்களும் ரசிகர்களை ரசிக்க வைக்கவே செய்தன. என்னதான் சமூக அக்கறை நிறைந்தப் படங்கள் எடுக்க நினைத்தாலும், புராண கதைகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு என்றே சொல்லலாம்.

அந்த வகையில், அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, 1950-ம் ஆண்டு கட்டத்தில் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்ததுதான் ‘பொன்னியின் செல்வன்’ கதை. கி.பி. 1000-ம் ஆண்டு காலத்தில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இந்தத் தொடர் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. அந்த காலத்தில் மட்டுமில்ல, எக்காலத்துக்கும் புகழ்பெற்ற காவியமாகவே ‘பொன்னியின் செல்வன்’ கதை இருந்து வருகிறது. அதனால்தான் இந்தப் படத்தை கடந்த 1958 வாக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் படமாக எடுக்க நினைத்தார். அதற்கான உரிமையும் பெற்ற நிலையில், வைஜெயந்தி மாலா, ஜெமினிகணேசன், பத்மினி, சாவித்ரி, எம்.என். நம்பியார் என அக்காலத்து முன்னணி திரை நட்சத்திரங்களை வைத்து எடுக்க நினைத்த நிலையில், விபத்து காரணமாக எடுக்க முடியாமல் போனது.

அதன்பின்னர், மகேந்திரன், பாரதிராஜா என பல இயக்குநர்களை வைத்து எடுக்க முயற்சித்தும் எடுக்கமுடியாமல் தட்டிச்சென்றே போனது. கடைசி வரை அவரால் அந்தப் படத்தை எடுக்க முடியாமலே போனது. அதன்பிறகு ‘இதயக் கோவில்’, ‘மௌனராகம்’, ‘நாயகன்’, ‘ரோஜா’ ஆகியப் படங்களின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் மணிரத்னம், 1990-களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக எடுப்பதுதான் தான், தனது கனவுத் திட்டம் என்று ஒரு விருது விழாவில் கூறியிருந்தார். இதற்காக முதலில் நடிகரும், இயக்குநருமான கமல்ஹாசனுடன் அவர் கதையை தயார் செய்துக்கொண்டிருந்தார்.

அதன்பிறகு பணப் பிரச்சனையால் அந்தப் படம் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் 2010-ம் ஆண்டு மீண்டும் இந்தப் படத்திற்கான பணிகள் துவங்கின. அதன்படி, இந்தமுறை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுடன் மணிரத்னம் கைக்கோர்த்தார். இதனை மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா (‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ இயக்குநர்) உறுதிப்படுத்தியும் இருந்தார்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏ.ரஹ்மான், சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், சாபு சிரில் ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிய உள்ளதாக பேசப்பட்டது. மேலும் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுகுறித்து அப்போது விஜய் பேசுகையில், ‘நேருக்கு நேர்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் மணிரத்னத்துடன் இணைவது பாக்கியம் என்று தெரிவித்திருந்தார். ஏனெனில் விஜயின் ‘நேருக்கு நேர்’ படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து மட்டுமே இருந்தார். இதனால் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகியதாக நடிகர் விஜய் கூறியிருந்தார்.

இதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, முதலாம் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படுகிற அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மகேஷ் பாபு அப்போது கூறியிருந்தார். ஆர்யா, சத்யராஜ், சூர்யா, விஷால், அனுஷ்கா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா, அசின் ஆகியோரிடமும் படம் குறித்து பேசப்பட்டது. எனினும் நடிகர்கள் தேர்வு இறுதி செய்யப்படாதநிலையில், பணப்பிரச்சனை, மைசூர் பேலஸ் மற்றும் லலிதா மஹாலில் படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் படம் மீண்டும் கைவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக படம் துவங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக நடிகர் விஜயுடன் போட்டோ ஷுட் நடைபெற்ற நிலையில், துரதிருஷ்டவசமாக படம் கைவிடப்பட்டது என மகேஷ் பாபு தமிழ் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

மேலும் அந்த சமயத்தில், இப்போது இருப்பதுபோன்ற விஎஃப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் மேம்பட்டதாக இல்லை என்று உணர்ந்ததால், மணிரத்னம் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாக மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி விளக்கியிருந்தார். இதனால் ஏறக்குறைய ஒரு 10 வருடங்கள் படத்தை ஒத்திப்போடவும் இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்தாக அவர் கூறியிருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு, 2019-ம் ஆண்டு மீண்டும் தனது கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையை இயக்குநர் முன்பு குறிப்பிட்டதுபோன்று தூசு தட்ட ஆரம்பித்தார். ஏனெனில் அப்போது ‘பாகுபலி’, ‘பத்மாவத்’போன்ற படங்கள் எல்லாம் கிராபிக்ஸில் நமக்கு நம்பிக்கை கொடுத்தன. இதையடுத்து இரண்டாவது முறையாக ‘செக்க சிவந்த வானம்’ தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து பேசி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார் மணிரத்னம்.

இதற்காக விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சிலம்பரசன், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அமலா பால், அனுஷ்கா ஷெட்டி, பார்த்திபன், ஜெயராம், விக்ரம் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், விஜய் சேதுபதி சில நாட்களில் அந்தப் படத்திலிருந்து விலகினார். சம்பள பிரச்சனை, தேதி ஒத்துவராதது, ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதி தான் காரணம் என்பதால், மணிரத்னம் கடுப்பாகியது என ஏகப்பட்ட காரணங்கள் உலா வந்தன. வந்தியத் தேவனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருமே விலகிய நிலையில், அதன்பிறகு தான் அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றது.

இதேபோல், ‘பொன்னியின் செல்வன்’ கதையில் ராஜராஜசோழனை விட வந்திய தேவனுக்கு தான் அதிகளவும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக அந்தக் கதையை படிக்கும் போது நமக்கு புரியும். இதனாலேயே மகேஷ் பாபு இரண்டாம் கதாநாயகனாக ராஜராஜ சோழனாக நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அப்போது தகவல்கள் வெளிவந்தன.

அதன்பிறகு இந்தப் படத்தில் பாடலாசிரியராக பணிபுரிய இருந்த வைரமுத்து மீதான சர்ச்சையால் அவரும் விலகினார். படப்பிடிப்பு தேதி ஒத்துவராததால், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் விலக இறுதியாக ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதேபோல் கலை இயக்குநர் சாபு சிரில் விலக தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்ர். இளங்கோ குமரவேல் திரைக்தையில் உதவி புரிய மணிரத்னம் மற்றும் ஜெயமோகனுடன் இணைந்தார். தமிழ்நாடு மற்றும் தாய்லாந்தில் படப்பிடிப்பு திட்டமிட்ட நிலையில், கீர்த்தி சுரேஷ், அமலா பால் இந்தப் படத்திலிருந்து விலகினர். இதையடுத்து திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

எனினும், சர்ச்சைகள், தடைகள் என எண்ணற்ற விஷயங்களை கடந்து, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு துவங்கியது. முதலில் தாய்லாந்தில் துவங்கிய நிலையில், அடுத்ததாக சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு புதுச்சேரியிலும் பின்னர் ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் எல்லாம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமிதி கிடைத்தவுடன் படக்குழு இலங்கையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை. அதன்பிறகு மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. குறிப்பாக ஹைதராபாத் ராமோஷி ராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு தான் அதிகளவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

மீண்டும் கொரோனா காரணமாகவும், விக்ரமின் ‘கோப்ரா’ பட தேதிகள் காரணமாகவும் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதும் மீண்டும், மத்தியரப் பிரதேசம், சென்னை, ஹைதராபாத், புதுச்சேரி என்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதற்கிடையில் காலணியுடன் கோயிலில் திரிஷா இருந்ததாகவும், காலநேரமின்றி குதிரைகளை வைத்து படம் எடுத்ததால், குதிரை இறந்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின. இப்படி பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தடைகளையும் கடந்து ‘பொன்னியின் செல்வன்’ படம் தயாராகி, டீசரும் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவும் தயாராக உள்ளது. டீசர் பிரம்மாண்டமாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்செக்கமாக எகிறியுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்களும் படம் எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை காண காத்திருக்கிறார்கள்.