சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையம் அருகே இருக்கும் கண்ணதாசன் மணி மண்டபத்தில், பழ கருப்பையாவின் ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழா 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 4 மணி நேரம் கழித்து பேசிய அவர், கீழே இறங்கி வரும்போது, அங்கிருந்த பெரியவர் ஒருவர் அவருக்கு சால்வை அணிவிக்க வந்தார். அப்போது, அந்த சால்வைய விருட்டென பிடுங்கிய சிவக்குமார், தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். அந்த வீடியோ க்ளிப்பில் அவ்வளவு தான் இருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், பொது இடத்தில் அடுத்தவர் மனதை காயப்படுத்தும் விதமாக நடந்துகொள்ளலாமா என்ற விமர்சனம் நடிகர் சிவக்குமார் மீது எழுந்தது. ஏற்கனவே செல்போனை தட்டிவிட்ட விவகாரத்திலும் அவருக்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்து இருந்தது.
இந்நிலையில், அந்த விவகாரம் குறித்து சிவக்குமாரே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “சால்வையை தூக்கி எறிந்தது தப்புத்தான்.. அதற்காக ரொம்ப வருந்துகிறேன்” என்று அவர் வருத்தம் தெரிவித்தாலும், உண்மையில் நடந்தது என்ன என்று அவர் தெரிவித்த பின் சிவக்குமார் மற்றும் அந்த பெரியவருக்கு இடையிலான நட்பு உருக்கமாக இருந்தது.
அந்த வீடியோவில், “மீடியா நண்பர்களுக்கு வணக்கம். காரைக்குடி சால்வை விஷயத்தை பார்த்திருப்பீர்கள். இவர் யாரோ எவரோ இல்லை. என் தம்பி, 50 ஆண்டுகால நண்பர். 1972ல் ஒரு நாடகத்திற்கு தலைமை தாங்க மன்னார்குடி சென்றிருந்தேன்” என்றார். அப்போது பேசிய கரீம், “நிகழ்ச்சிக்கு அண்ணனை வரவேற்றது நான்தான். சாப்பிடவே இல்லையே என்று கேட்டபோது, என் வீட்டில் தங்கி தங்கி வெங்காயம், தயிர் சாதம் சாப்பிட்டார்” என்றார். தொடர்ந்து பேசிய சிவக்குமார், 1974ல் நடந்த எனது கல்யாணத்திற்கு கரீம் வந்திருந்தார் என்று கூற, அண்ணன் கல்யாணத்தில் அனைவரையும் வரவேற்றதில் நானும் ஒருவன் என்றார் கரீம்.
தொடர்ந்து “கரீமின் திருமணத்தையே நான்தான் நடத்தி வைத்தேன். இவருடைய மகள், பேரன் திருமணத்துக்கும் நான் சென்றுள்ளேன். பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை அணிவிக்க வந்தால், அதை திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன். எனக்கு அணிவிப்பது பிடிக்காது. அன்றைக்கு பலரும் பேசிய பின் கடைசியாக நான் பேசினேன். மிகவும் சோர்வாக இருந்தேன். பேசிவிட்டு இறங்கிச்செல்லும்போது, தம்பி சால்வையுடன் வந்தார். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என்று தெரிந்தும், இந்த மனுஷன் கையில் சால்வை வைத்திருந்தார்” என்றார்.
இடையில் பேசிய கரீம், “எங்க வீட்டுக்காரம்மா அப்போவே சொன்னாங்க. சால்வைய கொண்டுபோவாதிங்க என்றார். நான் சால்வை கொண்டுசென்றதே தப்பத்தான்” என்றார்.
இறுதியாக பேசிய சிவக்குமார், ”தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவரது தவறு என்றால், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது எனது தவறு. அதற்காக வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்று வைத்துள்ளார்.
முன்னதாக கரீம் பெரியவரின் பேரன் கூட இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், தன்னுடைய தாத்தாவும் நடிகர் சிவக்குமாரும் நண்பர்கள் என்றும் அன்று நடந்ததே வெறு என்றும் கூறியிருந்தார். அதாவது, சால்வையை கீழே போட்ட பின் இருவரும் ஒன்றாக பேசிச் சென்றார்கள் என்று கூறியிருந்தார்.
”நடிகர் சிவகுமார் அங்கிளை பற்றி தயவு செய்து தப்பா நியூஸ் பரப்பாதீங்க.. காரைக்குடியில் வசிக்கும் எனது தாத்தாவும் சிவகுமார் அங்கிளும் நல்ல நண்பர்கள். எங்க குடும்பத்துல எந்த நிகழ்ச்சி நடந்தாலும் தவறாமல் சிவகுமார் அங்கிள் வருவாங்க. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் என் தாத்தா, சிவகுமார் அங்கிளுக்கு சால்வே அணிய.. எதுக்குடா இதேல்லாம் .. என்று சால்வேவை வாங்கி வீசிவிட்டு தாத்தாவை செல்லமாக உரிமையோடு கடிந்து கொள்கிறார். அதன் பின் தாத்தா கையை பிடித்து தன் கூடவே அழைத்து சென்று ஜாலியாக பேசிவிட்டு செல்கிறார்.
இதை தவறாக எடிட் செய்து தவறாக பரப்புகிறார்கள்.. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்” என்று Rifoy Jainulabideen என்ற அவரது பேரன் கூறியிருந்தார்.