சினிமா

’நரகாசூரனி’ல் இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் விலகியது ஏன்?

’நரகாசூரனி’ல் இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் விலகியது ஏன்?

webteam

'துருவங்கள் 16' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவரது அடுத்த படம், ’நரகாசூரன்’ . அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ளனர். 

படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட்டும் ஷரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தது. ஷூட்டிங் முடிந்து மே மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் பண விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதுபற்றி இவரும் ட்விட்டரில் நேரடியாக மோதி கொண்டனர். 

’பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் உங்களை நம்பினேன். ஆனால் நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். இறுதியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகி விட்டது. தயவு செய்து இனிமேல் யாரையும் ஏமாற்றாதீர்கள்’ என்று கவுதம் மேனன் மீது குற்றம் சாட்டி இருந்தார் கார்த்திக் நரேன்.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள கார்த்திக் நரேன், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். 

அந்த புதிய போஸ்டரில் கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை. தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். பணப் பிரச்னை காரணமாகவே அவர் வெளியேறியதாகத் தெரிகிறது.

கார்த்திக் நரேன் இதுபற்றி ட்விட்டரில், ‘ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. படத்தின் நீளம் 1.50 நிமிடம். டிரைலர் வந்துகொண்டே இருக்கிறது. ஆகஸ்ட்ரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.