சினிமா

காமெடி படம் பண்ணுவது ஏன்? தங்கர்பச்சான் விளக்கம்!

காமெடி படம் பண்ணுவது ஏன்? தங்கர்பச்சான் விளக்கம்!

webteam

காமெடி படம் இயக்குவது ஏன் என்று இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம் அளித்தார்.

தங்கர் பச்சான் எழுதி இயக்கும் படம், ‘டக்கு முக்கு திக்கு தாளம்’. பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் அவர் மகன் விஜித் ஹீரோவாக அறிமுகமாகிறார். மற்றும் மிலனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனீஸ்காந்த், ஸ்டன்ட் சில்வா, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர். தரண்குமார் இசை அமைக்கிறார். பிரபு தயாளன், பிரபுராஜ், சிவ பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. 

படம் பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் கூறும்போது, ’’இதுவரை நான் இயக்கிய படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அது இந்தப் படத்தில் இருக்காது. ஆனாலும் தனித்துவமும் தங்கர்பாச்சான் முத்திரையும் இருக்கும். இது இரண்டு பேரின் கதை. விஜீத், கீழ் நிலையில் இருக்கும் குப்பத்து ஏழைப் பையன். எந்த எதிர்கால திட்டமும் இல்லாத அடுத்த வேலை சாப்பாட்டிற்கு உத்தரவாதம் இல்லாதவர். அவருக்கும், கோடிகளை வைத்திருக்கும் பணக்காரர் ஒருவருக்கும் இடையில் நடக்கும் கதை இது. பணக்காரராக முனீஸ்காந்த் நடித்திருக்கிறார். பணத்தை வைத்துக்கொண்டு வாழ பிடிக்காத முனீஸ்காந்த், பணத்தைத் தேடிக்கொண்டிருக்கும் விஜித். இவர்கள் இரண்டு பேருக்கும் இந்த பணம் எதை கற்றுத்தருகிறது? என்ற கருத்தை படம் சொல்லும். இப்போது இருக்கும் சினிமா வேறு மாதிரி இருக்கிறது. மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. அதனால் நானும் என்னை மாற்றி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். 

இது காமெடி படம். ஏன் காமெடி படம் என்று கேட்டால், அதை உருவாக்குவதுதான் கஷ்டம் என்பேன். காமெடி பண்ணுவதற்கு சென்ஸ் தேவை. காமெடி சென்ஸ் இருக்கும் ஹீரோ, தமிழில் குறைவு. பெரிய இயக்குநர்களே காமெடி படங்கள் எடுத்திருக்கார்கள். ஶ்ரீதர், காதலிக்க நேரமில்லை எடுத்திருக்கிறார். பாலச்சந்தர், தில்லு முல்லு எடுத்துள்ளார். எல்லாப் படைப்பாளிகளும் ஒரு கட்டத்தில் தங்களை மாற்றி படங்கள் பண்ண வேண்டியிருக்கிறது. அதனால் நானும் காமெடி படம் உருவாக்கி இருக்கிறேன்’’ என்றார்.