சினிமா

'தி ஃபேமிலி மேன்'- வெப் சீரிஸில் கோலோச்சும் தென்னகத்தின் 'இருவர்'.. யார் இந்த ராஜ் & டிகே?

'தி ஃபேமிலி மேன்'- வெப் சீரிஸில் கோலோச்சும் தென்னகத்தின் 'இருவர்'.. யார் இந்த ராஜ் & டிகே?

webteam

தமிழகத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரட்டை இயக்குநர்கள் ராஜ் & டி.கே-வின் சினிமா பயணம் குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்...

அமேசான் பிரைமில் கடந்த 2019-ல் வெளியான தொடர் 'தி ஃபேமிலி மேன்'. இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தில் தமிழகத்தில் இருந்து பெரிய எதிர்ப்புகள் இல்லாத நிலையில், தொடரின் இரண்டாம் பாகம் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே அதுகுறித்த பேச்சுகளும் எதிர்ப்புக்களும் ஒருங்கே அரங்கேறின. தமிழ் ஈழ போராளிகள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இந்த எதிர்ப்புக்கு காரணம். கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு இந்திய சினிமா துறையும் அமைதியாக பயணித்து வரும் வேளையில் திடீரென்று எழுந்த எதிர்ப்பு, இந்தத் தொடரை கவனத்துக்குரியதாக மாற்றியது.

இந்த சர்ச்சைக்கு மூல காரணமாக பேசப்படுபவர்கள் இருவர். அந்த இருவர் படத்தின் இயக்குநர்களான ராஜ் - டி.கே. இந்த இரட்டை இயக்குநர்கள் 'தி ஃபேமிலி மேன்' தொடரின் முதல் பாகம் வந்தபோதே பரவலாக அறியப்பட்டார்கள். இவர்களின் முழு பெயர் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே. இருவருக்குமே சினிமாதான் அடிநாதம். தயாரிப்பு, திரைக்கதை, கதை எழுதுவது என அனைத்தும் இருவருக்குமே அத்துப்படி. இதனால் தற்போது இருவருமே இந்தி சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநர்கள். என்றாலும் இவர்களின் பூர்வீகம் தமிழகத்தின் எல்லையான ஆந்திராவின் திருப்பதியும், சித்தூரும்தான்.

இருவரும் அருகருகே உள்ள நகரங்களில் பிறந்தாலும் சந்தித்தது அவர்கள் படித்த கல்லூரியில்தான். பொறியியல் படிப்பு படிக்கும்போதே இருவருக்கும் அடிக்கடி நடக்கும் அரட்டைகள் சினிமா பற்றியதாகதான் இருக்குமாம். என்றாலும் கல்லூரி முடித்தவுடன், இவர்கள் சினிமாவில் நுழையவில்லை. அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்த பின்புதான் தங்களின் ஆசையை நிறைவேற்ற சினிமா துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

சொந்த ஊர் ஆந்திராவாக இருந்தாலும், முதன்முதலில் இவர்கள் எடுத்த சினிமா இந்தியில்தான். ஏன் இன்னும் சொல்வதென்றால், இவர்கள் அதிகம் இயக்கிய, தயாரித்த திரைப்படங்கள் இந்தியில் மட்டுமே. ராஜ் & டி.கே.யின் முதல் இந்தி படம் '99'. இது விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும், பாக்ஸ் ஆபிஸ் பத்திரிகை ''இந்தப் படம் இந்தி சினிமாவில் புதிய தரத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பாராட்டியுள்ளது. அவர்களின் அடுத்த படம் 'ஷோர் இன் தி சிட்டி' (Shor In The City). அந்த ஆண்டு வெளியான படங்களில் மிகவும் பாராட்டப்பட்ட இந்தி படம் என்றால், அது இந்த இரட்டை இயக்குநர்களின் படம் மட்டுமே. இப்படி படத்துக்குப் படம் இயக்குநர்களாக தங்களை நிரூபித்துக்கொண்டே வந்தனர். ஒவ்வொரு படத்திலும் தங்களுக்கே உரியவகையில் தனித்துவமான மற்றும் புதிய கதையம்சங்களுடன் அவர்கள் பணியாற்றியது சினிமா வட்டாரத்தில் அவர்களின் புகழை அதிகரித்தது.

வெறும் இயக்குநர்களாக இல்லாமல், கதாசிரியர்களாக பல படங்களுக்கு பணிபுரிந்துள்ளனர் இருவரும். மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து படங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் நிறுவனத்தில் முதல் தயாரிப்பு எது தெரியுமா? சமீபத்தில் அனைத்து தரப்பின் பாராட்டுகளையும் பெற்ற 'சினிமா பண்டி' திரைப்படம்தான்.

இப்படி பல படங்களில் 'தி ஃபேமிலி மேன்' தொடருக்கு முன்னதாக பணிபுரிந்தாலும், அவர்களை அதிகமாக தேடவைத்தது என்னோவோ 'தி ஃபேமிலி மேன்' தொடர் மட்டுமே. இந்தத் தொடரில் கிடைத்த புகழ் வெளிச்சம் அவர்களை வேறு ஒரு இடத்துக்கு கொண்டுச் சென்றுள்ளது. இந்தத் தொடரின் இரண்டு பாகங்களும் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பிளாக்பஸ்டர் வெப் சீரிஸாக மாறியிருக்கிறது.

இந்த வெப் சீரிஸ் அடைந்த வெற்றி, உண்மையில் இது ஒரு பாலிவுட் பிளாக்பஸ்டருக்கு குறைவானதல்ல. இந்தத் தொடர் மனோஜ் பாஜ்பாயை இந்திய ஓடிடி தளத்தின் சூப்பர் ஸ்டாராக மாற்றிவிட்டது. அதேநேரம் இரட்டை இயக்குநர்களையும் ஓடிடி தளத்தின் கிங் இயக்குநர்களாக மாற்றியுள்ளது எனலாம். 'தி ஃபேமிலி மேன்' இரண்டு தொடர்களை தாண்டி, முழுக்க ஓடிடி பக்கம் தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றனர். D2R என்ற தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்து வெப் சீரிஸ்களை தயாரித்து வரும் இவர்கள், அடுத்தடுத்து அதனை ரீலிஸ் செய்யவுள்ளனர். இதுபோக ஷாகித் கபூர் நடிப்பில், 'தி ஃபேமிலி மேன்' தொடர் போல் ஒரு தொடரை இயக்கி வருகின்றனர். இந்தத் தொடரில் ஷாகித் கபூர் உடன் நடிக்கும் மற்றொரு பிரபலம் விஜய் சேதுபதி.

வடமாநிலத்தவர்கள் மட்டுமே ஆண்டு வந்த பாலிவுட் சினிமாவை, தங்களுக்கே உரியவகையில் தனித்துவமான மற்றும் புதிய கதையம்சங்களுடன், தெற்கில் இருந்து சென்ற இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே தற்போது ஆளத் தொடங்கியுள்ளார்கள். பாலிவுட் சினிமாவில் அவர்களுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது. என்றாலும், 'தி ஃபேமிலி மேன்' தொடரில் ஈழத் தமிழர்கள் குறித்த சர்ச்சையை தவிர்த்திருந்தால் தமிழக ரசிகர்களும் அவர்களை உச்சிமுகர்ந்திருப்பார்கள் என்பது நிதர்சனம்!

- மலையரசு

தொடர்புடையவை: