bava chelladurai file image
சினிமா

இப்படி ஒரு கதையா.. பிக்பாஸிலிருந்து வெளியேறியது ஏன்? யார் இந்த பவா செல்லதுரை?

’என்னால் இங்கு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது’ என்று பிக்பாஸ் 7வது நிகழ்ச்சியின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லதுரை. தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பை பெற்ற பவா செல்லதுரை வீட்டை விட்டு வெளியேறியது ஏன்?

யுவபுருஷ்

பிரபல எழுத்தாளராக அறியப்படும் பவா செல்லதுரை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒரு எழுத்தாளராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். மொழிபெயர்ப்புகளையும் செய்துவருவதோடு, வம்சி புக்ஸ் என்று புத்தக நிலையம் மற்றும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

கதை சொல்லும் நிகழ்ச்சிகளில் கேட்போரை கட்டிப்போடும் இவர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பவா கதை சொன்ன வீடியோக்கள் இன்றளவும் யூடியூப் தளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் பவா. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த சங்கத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது.

61வது வயதை எட்டியுள்ள பவா செல்லதுரைதான் நடப்பு சீசனிலேயே மிகவும் மூத்தவர். தொடக்கம் முதலே அதிகம் கவனிக்கப்பட்ட பவா, ஓட்டம் என்னும் கதையை சொல்லி அனைவரது கண்களையும் கலங்க வைத்திருந்தார். ஆனால், சிதம்பர நினைவுகள் கதையை சொன்னபோது அது சற்று விமர்சிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அனிச்சை செயல்கள், வயது, டாஸ்க்கில் அதிகம் ஈடுபாட்டோடு இல்லாதது என்று பிக் பாஸ் போட்டியாளர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். மக்களிடையே நல்ல பெயரை வைத்துள்ள பவா, பிக்பாஸில் இருந்து வெளியேறினாலே மிச்சம் மரியாதையை காப்பாற்றிக்கொள்வார் என்று பேசப்பட்டது. இந்நிலையில், முதல் வாரம் முடிந்த கையோடு, உடல்நலத்தை காரணமாக வைத்து வெளியேறியுள்ளார் பவா. இவருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.