லியோஆடியோ வெளியீட்டு விழா முகநூல்
சினிமா

கசப்பான அனுபவமா? அரசியல் அழுத்தமா?-கொளுத்தி போட்ட LEO தயாரிப்பு நிறுவனம்! பிரச்னை எங்கே ஆரம்பிச்சது?

லியோ திரைப்படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

PT WEB

எதிர்பார்ப்பில் இருந்த லியோ ஆடியோ லான்ச்!

நடிகர் விஜய் திரைப்படங்களின் வெளியீட்டு நேரங்களில் சர்ச்சைகள் கிளம்புவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது லியோ படமும் சிக்கியுள்ளது. திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து என பெரிய பட்டாளமே நடிப்பதால் லியோ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. வெளியீட்டுக்கு முன்பாகவே வசூல் குறித்த ஆருடங்கள் சொல்லப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், இசை வெளியீட்டு விழா இல்லை என திடீரென வந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பில் சொன்னது என்ன?

தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தன்னுடைய அறிவிப்பில், "பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனினும் ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடிக்கடி அப்டேட் வெளியிடுவோம்.

பின் குறிப்பு: ஆடியோ வெளியீடு நடத்தாது பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல" இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் சொல்வது என்ன?

லியோ திரைப்படம் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு முதலில் 16 ஆயிரம் நபர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மைதானத்தின் மொத்த இருக்கைகள் 6500 என்பதால் அவ்வளவு நபர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் குறைந்தபட்சம் 9 ஆயிரம் நபர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

லியோஆடியோ வெளியீட்டு விழா

ஆனால் அதிகபட்சம் 7 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் உள்ளே அனைவரையும் அனுமதிக்க முடியாது ரசிகர்கள் மன்றங்களை சார்ந்த நபர்களாக இருந்தாலும் டிக்கெட் வைத்துள்ள நபர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என காவல்துறை சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியாக டிக்கெட் டிமாண்ட்!

லியோ ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்க 78 ஆயிரம் டிக்கட் கோரிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் போலியாக டிக்கெட் விற்பனை நடந்துள்ளதாகவும் ஒரு தகவல் ஏற்று வெளியாகி வந்தது. இந்த நிலையில்தான், நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என முடிவு செய்து இரவு 10 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் இடம்பெற்ற அந்த வார்த்தை!

இந்த விவகாரத்தில் பிரச்னை எங்கு ஆரம்பித்தது என்றால், தயாரிப்பு நிறுவத்தின் அறிவிப்பில் இதில் அரசியல் அழுத்தம் இல்லை என்று குறிப்பிட்டு சொல்லியது தான். அதுவும் பின் குறிப்பில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். அதனால், திமுக மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பக்கம் விமர்சனங்கள் திரும்பியுள்ளது. ஒருவேளை அந்த வார்த்தை இடம்பெறாமல் வெறுமனே இதர காரணங்களை மட்டும் சொல்லி இருந்தால் இவ்வளவு ட்ரோல் இருந்திருக்காது என்றே தெரிகிறது. நீங்க அப்படிலா நினைக்கக் கூடாது என்று சொல்லி அப்படி நினைக்க வைத்துவிட்டது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.

கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது!

உண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் அனுபவங்களை அரசு முழுமையாக உள்வாங்கி இருந்தால் மதுரையில் நடந்த ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்காது. உண்மையில் மதுரை நிகழ்ச்சி தொடர்பாக வெளியான பல வீடியோக்களில் பெண்கள் பலரும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் கேட்பதற்கே பயங்கரமாக இருந்தது. பாலியல் ரீதியான தொல்லைகள், நெரிசல் பிரச்னை உள்ளிட்ட ஒவ்வொன்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முறையான வகையில் சரியான இடத்தில் இதுபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவதே சரியான ஒன்றாக இருக்கும்.