சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும்போதே, அதில் இருந்து முழுமையாக வெளியேறி அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, அது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னும் ஓரிரு படங்களுக்குப் பிறகு முழுமையாக அரசியல் களத்தில் சுற்றிச்சுழல்வார் என்று கூறப்பட்டாலும், உறுப்பினர் சேர்க்கை, பொதுக்குழு கூட்டம், மாநாடு என்று இப்போதே பணிகளை தீவிரப்படுத்திவிட்டுள்ளார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை எனினும், 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று தனது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் இலக்கு நிர்ணயித்துள்ளார் விஜய். சமீபமாக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், கட்சி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் சென்று சேர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருந்து வந்தாலும், அரசியல் கட்சிகளில் நிர்வாக வசதிக்காக சில தொகுதிகளை தொகுத்து அதனை ஒரு மாவட்டமாக பிரித்து அதற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆளும் கட்சியான திமுகவில் தொகுதிகள் அனைத்தும் சுமார் 70 மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அதிமுகவில் சுமார் 80 மாவட்ட பொறுப்புகள் உள்ளன. ஆனால், புதிதாக கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், 2 தொகுதிகளை சேர்த்து ஒரு மாவட்டம் என்ற கணக்கில் 234 தொகுதிகளுக்கு 100 மாவட்ட பொறுப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளார். அதன்படி, கட்சியின் நிர்வாக வசதிக்காக, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை விட கூடுதல் மாவட்ட பொறுப்புகள் தவெகவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட 2 வருட கால அவகாசம் இருந்தாலும் மிக விரைவில் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தொழில்நுட்ப உதவியுடன் தவெக களமிறங்கியுள்ளது. அதாவது, உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டுமே, புதிய செயலி ஒன்று சிறப்பாக உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஓரிரு மாதங்களில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கவும் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதில், எந்த மாவட்டத்தில் யார் அதிக உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ, அவருக்கே மாவட்ட பொறுப்பில் முன்னுரிமை என்றும் கூறப்படுகிறது.
மேலே கூறியபடி 2 கோடி உறுப்பினர்களை மிக விரைவில் சேர்த்து முடித்துவிட்டு, விரைவில் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது, பிரம்மாண்டமான முதல் மாநாட்டை மதுரையில்தான் நடத்தியிருந்தார். லட்சக்கணக்கானோர் பங்கு பெற்ற அந்த மாநாட்டை இதுவரையில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன், டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் போன்றோர்களும் கட்சி தொடங்கி மதுரையில்தான் மாநாட்டை நடத்தினார்கள்.
சில மாதங்களுக்கு முன்னதாக அதிமுக மாநாடும் மதுரையிலேயே இடம்பெற்றது. இப்படி, விஜயகாந்த் பாணியில் நலத்திட்ட உதவிகளை செய்து கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், முதல் மாநில மாநாட்டையும் அவரது வழியிலேயே மதுரையில் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏப்ரல் 2ம் வாரத்தில் நடத்தப்படும் என்று நமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது. வழக்கமாக நடிகர் விஜய்யின் படங்களின் இசைவெளியீடுகளுக்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதும் சூழலில், “அண்ணன் ரெடி.. போஸ்டர் அடி” என்பது போல, மாநாடு தொடர்பான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய கட்சிகள் அனைத்தும் மதுரையை மையமாகக் கொண்டே தங்களின் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளன. அதுவொரு செண்டிமெண்ட் ஆகவே மாறிவிட்டது. ஏன் ரஜினிகாந்த் கூட தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் இருந்துதான் தொடங்க திட்டமிட்டு இருந்ததாக அப்போது தகவல்கள் கசிந்தன. விஜயகாந்த் உள்ளிட்டோரின் வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து: யுவபுருஷ்