’பிரபலங்களாக இருப்பதால் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை’ என்று நடிகை ரம்யா நம்பீசன் சொன்னார்.
தெலுங்கில் ஹிட்டான ’ஷனம்’ படம் தமிழில் ’சத்யா’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சிபிராஜ் ஹீரோ. ரம்யா நம்பீசன் ஹீரோயின். சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். வரும் 24-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.
இதில் நடித்துள்ளது பற்றி ரம்யா நம்பீசன் கூறும்போது, ‘ரீமேக் படம் பண்ணும் போது ஒரிஜினல் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சவால் இருக்கிறது. அந்தப் படத்தில் எப்படி நடித்திருக்கிறார்கள், இதில் எப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். நான் ரீமேக் படங்கள் பண்ணும்போது ஒரிஜினலில் உள்ளதை போன்று நடிக்க மாட்டேன். எனது இயல்பான நடிப்பையே வெளிப்படுத்துகிறேன். ’சத்யா’ படத்தை பொறுத்தவரை எனக்கு எளிதாக இருந்தது. ஏனென்றால் இயக்குனர் எப்படி கேட்டாரோ அப்படி நடித்திருக்கிறேன். கனவு கேரக்டர் என்று எதுவும் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அப்படி ஏதும் இல்லை. சில சிறந்த கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். மலையாளத்தில் ’சப்பா குரிசு’, தமிழில் ’சேதுபதி’ படங்களில் சவாலான வேடங்களில் நடித்துள்ளேன். நான் சினிமாவில் பாடி வருவது பற்றி கேட்கிறார்கள். நான் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால் சிறுவயதிலேயே பாடல், நடனம், நடிப்பு என பயிற்சி பெற்றேன். கலையின் மூலம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே என்று கேட்கிறார்கள். இன்றைய உலகில் எந்த மனிதனுக்கும் பாதுகாப்பில்லை. பிரபலங்களாக இருப்பதால் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், கடந்த காலங்களில் நடந்த சில அசம்பாவித சம்பவங்கள் அதை பொய்யாக்கி இருக்கின்றன’ என்றார்.