vijay and madhan pt
சினிமா

’விசில் போடு பாடலுக்கு விஜய் ரியாக்‌ஷன் இதுதான் கட்சிக்கு பாடல் எழுத தயார்’ மதன் கார்க்கி ஓபன் டாக்!

"பாடலை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருந்தது. ரொம்ப நன்றி என விஜய் சொன்னார். விஜய்யின் அரசியல் கட்சிக்கு பாட்டு எழுத வேண்டும் என்று கேட்டால் நிச்சயமாக எழுதுவேன்"

யுவபுருஷ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT - The Greatest Of All Time படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தது. இதையடுத்து, தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் பாடிய விசில் போடு பாடலை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். விஜய்க்கு கூகுள் கூகுள், அஸ்கு லஸ்கு, செல்ஃபி புள்ள போன்ற ஹிட் பாடலை எழுதிய மதன் கார்க்கியே, தற்போது இந்த பாடலையும் எழுதியிருக்கிறார்.

குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரியைத் தொடர்ந்து, “பார்ட்டி தொடங்கட்டுமா? மைக்க எடுக்கட்டுமா ? குடிமக்க-தான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு போமாட்ட நீ” என்று தொடங்கி பல அழுத்தமான வரிகளை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. இதுதொடர்பாக நம்முடன் பேசிய அவர், “விசில் பாடலை எழுதும் போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், படத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு வரலாம் என்று வெங்கட் பிரபு சொல்லியிருந்தார். பார்ட்டி என்பது கொண்டாட்டமான பார்ட்டி போன்ற அர்த்தங்களையும் கொண்டிருக்கலாம்.

மைக்க கையில் எடுக்கட்டுமா என்பது அரசியலை குறிப்பதாக மட்டும் இருக்காது. எல்லாவற்றுக்கும் மைக் தேவைப்படும். தமிழில் அதிகம் எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால், இந்த பாடல் இளைஞர்களுக்கு சென்று சேற வேண்டும் என்பதால் பல வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுத வேண்டி இருந்தது. இந்த படத்தில் நான் எழுதியது ஒரு பாடல் மட்டுமே. கங்கை அமரன் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

பாடலை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருந்தது. ரொம்ப நன்றி என விஜய் சொன்னார். விஜய்யின் அரசியல் கட்சிக்கு பாட்டு எழுத வேண்டும் என்று கேட்டால் நிச்சயமாக எழுதுவேன்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.