சினிமா

பாஸ்போர்ட், பணம் திருடு போனது எப்படி? சவுந்தர்யா ரஜினி விளக்கம்

பாஸ்போர்ட், பணம் திருடு போனது எப்படி? சவுந்தர்யா ரஜினி விளக்கம்

webteam

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தனது கணவரின் பாஸ்போர்ட், பணம் திருடப்பட்டது பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபரும் நடிகருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். விசாகன் வெளிநாட்டிலும் பிசினஸ் செய்துவருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்றுவருவார்.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினியும் விசாகனும் ஒன்றாக லண்டன் செல்ல முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்குச் சென்றனர். அங்கு விசாகன் தனது பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த பேக்-கை பார்த்தார். அது மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் ஒன்றில் தங்கினர். இதுபற்றி இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரஜினிகாந்தின் மகள், மருமகன் என்பது தெரிந்ததும் உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கினர்.  இந்நிலை யில் அவரது பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலரை திருடியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார். 
 
’’சர்வதேச விமான நிலையங்களில், பயணிகளுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறதா? கடந்த 1 ஆம் தேதி, ஹீத்ரு விமான நிலையத்தின் எமிரேட்ஸ் லவுஞ்சில், எங்கள் காருக்காக காத்திருந்தபோது, எங்கள் கைப்பை (hand luggage) திருடப்பட்டுவிட்டது. உடனடியாக புகார் கொடுத்தோம். காத்திருக்கும்படி போலீசார் மெயில் அனுப்பியிருந்தனர். அடுத்த நாள் எங்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில் , எமிரேட்ஸ் லவுஞ்ச்சில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இது அதிர்ச்சியாகவும் பொறுப்பற்றப் பதிலாகவும் இருந்தது. என் கணவரின் பாஸ்போர்ட் உட்பட விலை உயர்ந்த பொருட் களை இழந்துவிட்டோம். இது அதிர்ச்சிகரமான அனுபவம். விமானநிலையங்களில் பயணிகளுக்கு என்ன பாதுகாப்பு உறுதி இருக்கிறது? இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடாது. வேறு யாருக்குமே நடந்திருக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.