கன்னட இயக்குநர் ரவி ஸ்ரீவட்ஷா மீதான மீ டூ புகாருக்கு வருத்தம் தெரிவிப்பதாக கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி கூறியுள்ளார்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படையாக தெரிவித்தனர். சினிமா, அரசியல், பத்திரிகை என அனைத்து துறைகளிலும் மீ டூ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் கன்னட இயக்குநர் ரவி ஸ்ரீவட்ஷா மீது நடிகை சஞ்சனா கல்ராணி மீ டூ புகார் தெரிவித்தார். அதன்படி 13 வருடங்களுக்கு முன்னதாக இயக்குநர் ரவி ஸ்ரீவட்ஷா இயக்கத்தில் நடித்தேன். அந்த படத்தில் ஒரு முத்தக்காட்சி மட்டுமே இருப்பதாக முதலில் கூறினர். ஆனால் 15க்கும் மேற்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. இயக்குநர் ஸ்ரீவட்ஷா படப்பிடிப்பின் போது பலமுறை என்னை திட்டினார், மிரட்டினார் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த இயக்குநர் ஸ்ரீவட்ஷா, சஞ்சனாவின் குற்றச்சாட்டு எதுவும் நம்பும்படியாக இல்லை. அவருக்கு இணக்கமான காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை என்றால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. இந்த புகாருக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் கன்னட இயக்குநர்கள் சங்கம் வரை சென்று, இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டது.
இந்நிலையில் மேம்போக்கான குற்றச்சாட்டை யார் மீதும் தொடுக்கக்கூடாது என்றும் இயக்குநர் மீதான குற்றச்சாட்டை நடிகை சஞ்சனா திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றும் நடிகர் அம்பரீஸ் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து நடிகை சஞ்சனா தான் தெரிவித்த மீடூ புகாருக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதன்படி நான் இளம்வயதாக இருந்த தருணத்தில் நடந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டேன். அப்போது நான் மிகவும் மனச்சோர்வில் இருந்தேன். ஆனால் இன்றைய நிலை வேறு. நான் திரைத்துறையில் உள்ள யார் மனதையும் காயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த புகாரை தெரிவிக்கவில்லை. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்