சினிமா

சிக்கலுக்கு பின் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: தாமதத்துக்கான காரணம் என்ன?

சிக்கலுக்கு பின் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: தாமதத்துக்கான காரணம் என்ன?

சங்கீதா

பல்வேறு சட்ட சிக்கல்களை தாண்டி, விவேக் அக்னி ஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பாலிவுட் படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பிரபல இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

காஷ்மீரில் வாழும் பண்டிட்கள் மற்றும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியானநிலையில், காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகளை, இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்வதாக காட்சிகள் வெளியானதால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து, இஸ்லாமிய இனத்தவரை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதால், இந்தப் படத்தை தடை செய்யக் கோரி பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், இந்தப் படத்தின் பிரிமீயர் ஷோவை பார்த்த மறைந்த இந்திய விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, படக்குழுவிடம் தனது கணவரை, உண்மைக்கு புறம்பாக காட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

கடந்த 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) கட்சியின் தலைவர் யாசின் மாலிக் தலைமையிலான குழுவால், ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 விமானப் படை வீரர்களில், ரவி கண்ணாவும் ஒருவர். இவரின் தியாகத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ள காட்சிகளை நீக்குமாறு அல்லது திருத்தம் செய்யுமாறு, ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா வலியுறுத்தியும், படக்குழு நீக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தை நிர்மல் கண்ணா நாடியுள்ளார். இந்த வழக்கை நேற்று விசாரித்த ஜம்மு மாவட்ட கூடுதல் நீதிபதி தீபக் சேதி, மனுவில் கூறப்பட்டுள்ள உண்மைகளை கருத்தில்கொண்டு, மறைந்த விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் காட்சிகளை காட்சிப்படுத்த தடை செய்து உத்தரவிட்டார்.

எனினும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, திட்டமிட்டப்படி இன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பல்வேறு சட்டப் போராட்டங்களை தாண்டி வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.