ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த சினிமா ‘ஜோசப்’. இத்திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சினிமாவை பத்மகுமார் இயக்கியிருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் இதில் பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.
தன் தனிப்பட்ட வாழ்வில் நடந்த காதல் தோல்வியால் மனமுடைந்த கான்ஸ்டபிள் மாயன், முழு நேரம் மதுவில் மூழ்கியிருக்கிறார். வி.ஆர்.எஸ் பெற்று ஓய்வில் இருக்கும் அவர் தன் மனைவியையும் பிரிந்து வாழ்கிறார். வால்பாறையில் தனியாக வசித்து வரும் மாயன் கொலை குற்றங்களைக் கண்டறிவதில் கில்லாடி. துவக்கக் காட்சியே அவர் புத்திசாலித்தனமாக ஒரு கொலையைக் கண்டுபிடிப்பதாக காண்பிக்கப்படுகிறது. தனது மகளின் அகால மரணமும் கூடவே சேர்ந்து கொள்ள அதே பாணியில் மாயனின் மனைவியும் ஒரு விபத்தில் இறந்து போகிறார்.
இந்நிலையில் இந்த மரணங்கள் குறித்து எழும் சந்தேகத்தைத் தீர்க்க விசாரணையில் இறங்கும் மாயனுக்கு திடுக்கிடும் மெடிக்கல் மாஃபியா குறித்து தெரிய வருகிறது. ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ஒரு பெரிய மெடிக்கல் மாபியாவை பொது வெளியில் எப்படி அம்பலப்படுத்தினார். அதற்காக அவர் கொடுத்த விலை என்ன என்பதே விசித்திரனின் திரைக்கதை.
இதுவரை திரையில் பார்க்காத ஆர்.கே.சுரேஷை இந்த சினிமாவில் பார்க்கலாம். பொதுவாக ரீமேக் படங்கள் சொதப்பலாகவே வரும் என்ற எண்ணத்தை விசித்திரன் உடைத்திருக்கிறார். ஜோஜூ ஜார்ஜ் மலையாளத்தில் கொடுத்த தாக்கத்தை முடிந்த மட்டும் ஆர்.கே.சுரேஷ் கொடுத்திருக்கிறார். நிதானமான காட்சிகள், பதற்றமில்லாத மனிதர்கள், குளுகுளு நில அமைப்புகள் என பார்க்கவே புதிய அனுபவமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. இதமான காட்சி அனுபவத்தில் ஜி.வி.பிரகாஷின் இசையும் யுகபாரதியின் பாடல் வரிகளும் இணைந்து கொள்ள விசித்திரன் இன்னும் வலு பெறுகிறார்.
இது ஒரு உண்மைக்கதை என்பதாலும் மலையாள சினிமாவின் ரீமேக் என்பதாலும் புதிதாக எதுவும் முயற்சி செய்யும் வாய்ப்பு குறைவு. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கென சில இதமான பாடல்களையும் சேர்த்து திருப்தியாகவே வழங்கியிருக்கிறார் இயக்குநர். வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு இதம். சில காட்சிகளே வந்தாலும் மது ஷாலினி மனதில் நிறைகிறார். காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மனதில் நுழையும் மகிழம்பூ என்ற யுகபாரதியின் வரிகள் மனதில் நுழைந்து மாயம் செய்கிறது.
கதையின் குறையாக தெரிவது ஒன்றே ஒன்றுதான். ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் ஏன் 48 ப்ரேம்ஸில் ஸ்லோ மோசனில் நடக்கிறார்கள், நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு நிதானமான ட்ராமாதான் என்றாலும் மாயன் தவிர மற்றவர்களாவது கொஞ்சம் சுறுசுறுப்பாக இயக்கியிருக்கலாம்.
இளவரசு உள்ளிட்ட மாயனின் நண்பர்களின் கதாபாத்திர வடிவமைப்பு அருமை. உண்மையில் இக்கதையின் கரு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உடலுறுப்பு தானத்தில் இத்தனை பெரிய திருட்டு வேலைகளை செய்ய முடியுமா என தெரியவரும்போது நமக்கு பொது சமூகத்தின் மீதும் மருத்துவ உலகின் மீதும் கசப்பே மிஞ்சுகிறது.
இன்று மிகப்பெரிய வணிகமாக இருப்பது மருத்துவமும் அதனைச் சுற்றியுள்ள தொழில்களும். ஆனால் மனித உயிர்களைக் காக்க வேண்டிய இந்த மருத்துவத்துறையில் நிகழ்வதாகக் காட்டப்படும் இந்த உடலுறுப்புத் திருட்டு விசயங்கள் நம்மை சோர்வடையச் செய்கின்றன. பணம் இருப்பவர்களுக்கே இவ்வுலகில் வாழும் அதிகாரம் இருப்பதாக உணரமுடிகிறது. மருத்துவ மாஃபியா கதையை த்ரில்லர் கதையாக மிக நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். மலையாளத்தில் இந்த சினிமாவை நீங்கள் பார்த்திருந்தாலும் விசித்திரன் அதே திருப்தியை நிறைவை மீண்டும் நமக்கு தமிழில் தருகிறான்.
நல்ல முயற்சி விசித்திரனுக்கு பாராட்டுகள்.